நடிகர் சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை - மருத்துவர் தகவல்
அமெரிக்காவில் நடிகர் சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
மும்பை,
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவர் 1974ல் வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாண' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தற்போதுவரை 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற முடிவு செய்தார். அதன்படி, கடந்த 19-ம் தேதி சிகிச்சைக்காக சிவராஜ்குமார் அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில், அங்குள்ள புளோரிடாவின் மியாமி இன்ஸ்டியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வீடியோ பகிர்ந்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகேஷ் மனோகரன் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர்,
'சிவராஜ்குமாரின் உடல்நிலை குறித்த அறிவிப்பை பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அதில் அவருக்கு சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளது. சிவராஜ்குமார் தற்போது சீரான நிலையில் நலமுடன் இருக்கிறார், விரைவில் அவர் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்றார்.