மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் வழிபாடு

நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளையொட்டி மாமல்லபுரம் கோவிலில் மனைவியுடன் வழிபாடு செய்தார்.
செங்கல்பட்டு,
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கியவர் சிவகார்த்திகேயன். அங்கிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தனுஷ் நடித்த '3' படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். பின்னர் எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து, "வருத்தப்படாத வாலிபர் சங்கம், வேலைக்காரன், டான், டாக்டர்' போன்ற வெற்றி படங்களில் நடித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி' படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் கருடபூஜை செய்து சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி வழிபாடு செய்தனர். அப்போது அங்கு வந்த பக்தர்கள் மற்றும் நரிக்குறவர் சமூக பெண்கள் சிவகார்த்திகேயனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.