அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து தர்காவில் வழிபாடு செய்த நடிகர் ராம்சரண்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு விடுத்த நிலையில், அமீன்பீர் தர்காவில் ராம் சரண் வழிபாடு செய்துள்ளார்.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.
இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் திருக்கோவிலுக்கு மாலை அணிந்துள்ள நடிகர் ராம்சரண் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன்பீர் பெரிய தர்காவில் நடைபெற்ற 80வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிபாடு செய்துள்ளார்.
3 மாதங்களுக்கு முன்பே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு விடுத்த நிலையில், தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து வருகை புரிந்துள்ளார். மேலும், அங்குள்ள துர்கா தேவி கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இவரின் வருகையை அறிந்து கடப்பா நகரம் முழுவதும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர்.