கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் எஸ்.ஜே.சூர்யா
நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு சென்னை, வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை,
பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்.ஜே.சூர்யாவுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து பிஸியான நடிகராக வலம் வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. குறிப்பாக வில்லனாக இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக சூர்யாவின் சனிக்கிழமை என்ற நானியின் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார். இப்போது கேம் சேஞ்சர், இந்தியன் 3, எல்.ஐ.கே, வீர தீர சூரன், சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கு முன்னதாக சிம்பு, ராம் சரண் ஆகியோருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.