15 வருட காதல்...தனது காதலரை அறிமுகம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்


15 வருட காதல்...தனது காதலரை அறிமுகம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 27 Nov 2024 1:34 PM IST (Updated: 4 Dec 2024 4:02 PM IST)
t-max-icont-min-icon

காதலரை அறிமுகம் செய்த நடிகை கீர்த்தியின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தயாரிப்பாளரும், நடிகருமான சுரேஷ் மற்றும் நடிகை மேனகா தம்பதியினரின் இளைய மகளான கீர்த்திசுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைதொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ரகு தாத்தா படத்தில் இவரது காதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்தார்.

இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்கும் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண்டனியுடன் தன் காதலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 15 வருடமாக அவரை காதலித்து வருவதாக பதிவிட்டுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், கீர்த்தியின் பதிவுக்கு தற்போது பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


Next Story