இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரிய விஷயம் - ஐ.நா.வில் இந்தியா கருத்து
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 3 வாரங்களாக தொடர்ந்து வருகிறது. பொதுமக்களுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த போரை நிறுத்த ஐ.நா.வும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்பட மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை தூதர் ரவீந்திரா பேசியதாவது:-
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் பெரிய அளவிலான பொதுமக்கள் உயிர் இழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பெருகிவரும் மனிதாபிமான நெருக்கடி மிகவும் ஆபத்தானது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண
மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கவலைக்குரிய விஷயமாகும். அனைத்து தரப்பினரும் பொதுமக்களை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பெருகி வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் சூழ்நிலை இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நம்பகமான, நேரடி பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளின் தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. இது இறையாண்மை மற்றும் சுதந்திரத்துடன் சாத்தியமான பாலஸ்தீன அரசை நிறுவ வழிவகுக்கும்.
மனிதாபிமான உதவிகள் தொடரும்
இதை நோக்கி, நேரடியான சமாதான பேச்சுவார்த்தைகளை விரைவாக தொடங்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.
இஸ்ரேல் இந்த பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட நெருக்கடியான தருணத்தில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்றோம்.
காசா மக்களுக்கு மனிதாபிமான பொருட்களை வழங்குவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை இந்தியா வரவேற்றது. பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்பட 38 டன் மனிதாபிமான பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. இந்த சவாலான காலங்களில், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும். இவ்வாறு ரவீந்திரா பேசினார்.