அரசியல் இருப்பைக் காட்ட.. உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி
அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி. திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் புகாரளித்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக தினமும் அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.
தினமும் அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஊடகங்களில் செய்தியாக்குவதை ஒரு அஜெண்டாவாக வைத்திருக்கும் பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது. இனி புகாரளித்தால் நம்மை வைத்து அரசியல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தை பெண்களிடம் உருவாக்கவே பழனிசாமி திட்டமிடுகிறார் எனத் தோன்றுகிறது” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.