உ.பி.: வங்காளதேச பிரதமர் ஹசீனாவின் விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது


உ.பி.: வங்காளதேச பிரதமர் ஹசீனாவின் விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது
x
தினத்தந்தி 5 Aug 2024 12:36 PM GMT (Updated: 5 Aug 2024 1:00 PM GMT)

ஷேக் ஹசீனாவின் விமானம் இந்திய வான்வழியே பாதுகாப்பாக கடந்து செல்வதற்கான வழியை ஏற்படுத்தி தருவது என இந்தியா முடிவு செய்துள்ளது.

காசியாபாத்,

வங்காளதேசத்தில் கடந்த சில வாரங்களாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் சர்ச்சைக்குரிய விவகாரம் வன்முறையாக வெடித்துள்ளது.

இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் கடந்த மாதத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கடந்த மாதத்தில், 300 பேர் வரை பலியாகி உள்ளனர்.

வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்று புதிதாக ஏற்பட்ட மோதலில் காவல் துறை அதிகாரிகள் உள்பட 100 பேர் வரை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மாணவர்கள் உள்ளிட்டோரின் தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்துள்ளார்.

அவர், பாதுகாப்புக்காக டாக்கா அரண்மனையை விட்டு வெளியேறினார். பிரதமர் ஹசீனா மற்றும் அவருடைய சகோதரி இருவரும் கோனோ பாபன் என்ற அரசு இல்லத்தில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறினர். அவர் இந்தியாவில் தஞ்சமடைவார் என கூறப்பட்டது.

இந்நிலையில், அவருடைய ராணுவ போக்குவரத்து விமானம் இந்தியாவின் பாட்னா நகரை கடந்து வந்தது. உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் புதுடெல்லியருகே ஹிண்டன் இந்திய விமான படை தளத்தில் வங்காளதேச பிரதமர் ஹசீனா மற்றும் அவருடைய சகோதரி உள்ளிட்டோர் வந்து சேர்ந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது.

இதனை தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அவருடைய பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர். அவர், இந்தியாவில் இருந்து வேறொரு விமானத்தில் லண்டன் நகருக்கு செல்ல கூடும் என தெரிகிறது. ஆனால், அவருடைய ராணுவ போக்குவரத்து விமானம், அவரை லண்டனுக்கு கொண்டு செல்வது பற்றிய உடனடியான தகவல் எதுவும் தெளிவாக வெளிவரவில்லை.

எனினும், டாக்காவில் இருந்து கேட்டு கொண்டதற்கேற்ப, ஹசீனாவின் விமானம் இந்திய வான்வழியே பாதுகாப்பாக கடந்து செல்வதற்கான வழியை ஏற்படுத்தி தருவது என இந்தியா முடிவு செய்துள்ளது.


Next Story