பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 6 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி
2019 நாடாளுமன்ற தேர்தலில், பொது தொகுதியான வாரணாசி தொகுதியில், நரேந்திர மோடி 63.62 சதவீத வாக்குகளை பெற்று, சமாஜ்வாடி கட்சியின் ஷாலினி யாதவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
வாரணாசி,
2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலில் இன்று காலை முதல் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், பிரதமர் மோடி தொடர்ந்து முன்னிலை பெற்றார். பல சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அவர் 6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய், 1.5 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். வாரணாசி தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி, இந்த வெற்றியால், 3-வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த தேர்தலில் மோடி தவிர்த்து, 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனினும், காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அத்தர் ஜமால் லாரி ஆகியோர் முக்கிய போட்டியாளராக இருந்தனர்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், பொது தொகுதியான வாரணாசி தொகுதியில், நரேந்திர மோடி 63.62 சதவீத வாக்குகளை பெற்றார். அவர் 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகள் வித்தியாசத்தில், சமாஜ்வாடி கட்சியின் ஷாலினி யாதவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2014 நாடாளுமன்ற தேர்தலில், 56.37 சதவீத வாக்குகளை பெற்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை, 5 லட்சத்து 81 ஆயிரத்து 22 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.