மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 9 Aug 2024 7:31 AM GMT (Updated: 9 Aug 2024 9:02 AM GMT)

மாநிலங்களவையில் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

புதுடெல்லி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பட்ஜெட் உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை, ஆளும் கட்சியினர் அவரை தவறான முறையில் பேசுகின்றனர். அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை' என்று காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் கூறினார்.

இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த சமாஜவாடி எம்.பி. ஜெயா பச்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது மைக் அணைக்கப்படுகிறது. பெண் எம்.பி.க்களுக்கு மரியாதை வழங்கப்படவில்லை. இதற்கு அவைத் தலைவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்' என்றார்.


Next Story