அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு


அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
x
தினத்தந்தி 5 Oct 2024 7:00 AM IST (Updated: 5 Oct 2024 6:19 PM IST)
t-max-icont-min-icon

அரியானா சட்டசபை தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெற்றது.

சண்டிகார்,

அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், 90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலில், 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

அரியானா முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அரியானா சட்டசபை தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.

Live Updates

  • 5 Oct 2024 11:22 AM IST

    அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. எம்பி நவீன் ஜிண்டல், குருக்ஷேத்திர பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். 

  • 5 Oct 2024 10:55 AM IST

    அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் மல்புத்த வீராங்கனை வினேஷ் போகத், சார்க்கி தாத்ரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

    வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், "இது அரியானாவுக்கு மிகப்பெரிய திருவிழா. மக்களுக்கு இது மிக முக்கியமான நாள். வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க நான் வேண்டுகிறேன். மகளிர் உரிமைக்காக பாடுபடும் கட்சிக்கு வாக்களியுங்கள். நான் எந்தக் கட்சியைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். வெற்றி நம்பிக்கை இருக்கிறது. பாஜக விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் என்ன செய்தது என்பதை மக்கள் மறக்கவில்லை" என்றார்.

  • 5 Oct 2024 10:42 AM IST

    அரியானா சட்டசபை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மல்யுத்த வீராங்னையும், பாஜக உறுப்பினருமான பபிதா போகத் தனது வாக்கினை செலுத்தினார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக, அனைவரும் வெளியே வந்து அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்டின் குடிமகனாக இது உங்களின் மிகப்பெரிய பொறுப்பு. எந்த கட்சியில் இணைய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு. வினேஷ் போகத்தின் முடிவை நான் மதிக்கிறேன்"என்றார்.

  • 5 Oct 2024 10:23 AM IST

    காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்:-

    அரியானா சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • 5 Oct 2024 10:16 AM IST

    வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

    அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள செய்தியில், அரியானா சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஜனநாயகத்தின் இந்த புனித திருவிழாவின் ஒரு பகுதியாக அனைத்து வாக்காளர்களும் பங்கெடுத்து கொண்டு, வாக்களிப்பதில் ஒரு புதிய சாதனையை படைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

    இந்த தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்க செல்லும் இளம் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.

  • 5 Oct 2024 10:15 AM IST

    அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா, விளையாட்டு வீராங்கனைகளான வினேஷ் போகத் மற்றும் மனு பாக்கர், அரியானா முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரியான மனோகர் லால் கட்டார் ஜனநாயக ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அஜய் சிங் சவுதாலா உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர். 


Next Story