கன்னி - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


கன்னி - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

8.10.2023 முதல் 25.4.2025 வரை

கன்னி ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 7-ம் இடத்திற்கு வருகிறார். அதே நேரம் ஜென்ம ராசிக்கு கேது வருகிறார். இதனால் சர்ப்ப தோஷ ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். ராகுவும், கேதுவும் மேற்கண்ட இடங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு வீற்றிருந்து, நட்சத்திர பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.

உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால், குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். இருந்தாலும் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தளரவிட வேண்டாம். 7-ம் இடம் என்பது களத்திர ஸ்தானமாகும். அங்கு ராகு சஞ்சரிப்பதால், திருமண வயதை அடைந்த ஆண், பெண்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தை நடைபெறும். ஆனால் அவ்வளவு சுலபத்தில் திருமணம் முடிவாகாது.

ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும். உறவினர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சமூகப் பற்று மிக்க உங்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு உற்சாகத்தைக் குறைக்கும். ஆகையால் கவனமாக செயல்படுங்கள். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலம் சகஜநிலைக்கு வரலாம்.

குரு மற்றும் சனி வக்ர காலம்

8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு சிறப்பாக அமையும். இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் வீடு கட்டி குடியேறுவார்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலத்தில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். 'வெளிநாட்டு அழைப்புகளை ஏற்பது பற்றி யோசிப்பீர்கள். பெற்றோரின் அனுபவம் புதிய ஆற்றலை வழங்கும்.

சனிப்பெயர்ச்சி காலம்

20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். அவர் ஜீவன ஸ்தானத்திற்கு செல்வதால், பணி நிரந்தரம் ஏற்படும். தடைகள் ஒவ்வொன்றாக விலகும். 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத திருப்பங்கள் வந்துசேரும். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம் தொடர்பான முயற்சி வெற்றியாகும்.

குருப்பெயர்ச்சி காலம்

1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு பகவான் செல்கிறார். அங்கிருந்து உங்கள் ராசியையும் 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகிறார். குருவின் பார்வையால் இதுவரை நிலவிய குழப்பங்கள் அகலும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கைகூடும். பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் போன்ற முயற்சியில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு அதிக விரயத்தைக் கொடுக்கும். நிம்மதி குறையும். தொழிலைப் பொறுத்தவரை, யாரை நம்பியும் எதுவும் செய்ய இயலாது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

வளர்ச்சி தரும் வழிபாடு

சப்தம ராகுவால் சந்தோஷம் கிடைக்கவும், ஜென்ம கேதுவால் சிறப்புகள் காணவும் வெள்ளிக்கிழமைதோறும் விரதமிருந்து அம்பிகையை வழிபடுங்கள்.


Next Story