திருக்கார்த்திகை விரதம் இருக்கும் முறை
பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
திருக்கார்த்திகை தீபத்திருநாள் நாளை மறுநாள் (13.12.2024) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். கோவில்களிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி அளித்தது கார்த்திகை மாதத்தில் என்பதால் தீபத்திருநாளையொட்டி விரதம் இருந்து, விளக்கேற்றி வழிபடுவது வாழ்வை வளப்படுத்தும் என்பது நம்பிக்கை.
விரதம் இருக்கும் முறை
கார்த்திகை தீபத் திருநாளுக்கு முன்தினமான பரணி நட்சத்திரம் அன்று, பகல் நேரத்தில் மட்டும் ஒரு வேளை உணவு சாப்பிட வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி, இறைவனை வழிபட்டு தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அன்று முழுவதும் உணவைத் தவிர்த்து இரவு கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பால் அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம். பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், பழங்கள் சாப்பிட்டோ, பழச்சாறுகள் குடித்தோ விரதம் இருக்கலாம்.
தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடித்து வருபவர்களுக்கு, மறுபிறப்பு இல்லை, சந்ததியினர் பெரும் புகழோடு வாழ்வர் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு பரணி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. எனவே விரதம் இருப்பவர்கள் நாளை விரதத்தை தொடங்கி, நாளை மறுநாள் மாலையில் விளக்கேற்றி வழிபாடுகளை முடித்தபின் விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.