விசுவாவசு ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்

குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மிதுன குருவின் சஞ்சாரத்தால் துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் புனிதமடைகின்றன.
இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினமானது, சித்திரை மாதம் 1-ந் தேதி (14.4.2025) திங்கட்கிழமை அன்று வருகிறது. இந்த தமிழ் வருடத்தின் பெயர் 'விசுவாவசு' ஆகும்.
விசுவாவசு ஆண்டின் தொடக்கத்தில் குரு - சுக்ர பரிவர்த்தனை, யோகம் தரும் விதத்தில் உள்ளது. புதன் நீச்சம் பெற்று, உச்சம் பெற்ற சுக்ரனோடு இணைந்து நீச்ச பங்க ராஜயோகத்தை தருகிறார். ராஜகிரகமான சூரியனும், சந்திரனும் சப்தம பார்வையாகப் பார்க்கிறார்கள். சனி கும்பத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். சனி - செவ்வாய் பார்வைக் காலத்திலும், சனி - செவ்வாய் சேர்க்கை காலத்திலும் கவனமாக செயல்பட வேண்டும்.
ஆண்டின் தொடக்கத்தில் சுக்ரன் உச்சம் பெறுவதால், கலைத்துறை, நாட்டியத்துறை, இசைத்துறை, கல்வித்துறை, விஞ்ஞானத்துறை, ஜவுளித்துறை, ஜோதிடத்துறை, பத்திரிகைத்துறைகளில் வளர்ச்சி ஏற்படும்.
குருவின் பார்வையால் கன்னி ராசி, விருச்சிக ராசி, மகர ராசி ஆகிய மூன்று ராசிகளும் புனிதமடைகின்றன. 11.5.2025 அன்று குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மிதுன குருவின் சஞ்சாரத்தால் துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் புனிதமடைகின்றன. மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். தொட்டது துலங்கும், தொழில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
குருபகவான் 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் கடக ராசிக்கு அஷ்டமத்துச் சனியும், சிம்ம ராசிக்கு கண்டகச் சனியும், மகர ராசிக்கு பாதச் சனியும், கும்ப ராசிக்கு ஜென்மச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மீன ராசிக்கு விரயச் சனியும் நடைபெறுகிறது.
வாக்கிய கணித ரீதியாக 6.3.2026 அன்று சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. அது நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்கள் முன்பாகவே நற்பலன்கள் வரத்தொடங்கும். இருப்பினும் சுய ஜாதக அடிப்படையில் யோக பலம் பெற்ற நாளில் தெய்வ வழிபாடு செய்தால் வரும் விரயங்கள் வாசலோடு நிற்கும். தமிழ் ஆண்டின் தொடக்க நாளில் விநாயகர், சிவன், அம்பிகை, விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி, அனுமன், பைரவர், நவக்கிரகம், இஷ்ட தெய்வம், குலதெய்வம் ஆகியவற்றில் எதாவது ஒரு தெய்வத்தை வழிபட்டு இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய பிரார்த்தனை செய்வது நன்மை பயக்கும்.