2025 புத்தாண்டு ராசி பலன் - சிம்மம்
தொழில் துறையினர் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும்.
பொதுப்பலன்கள்
சிம்ம ராசியினருக்கு இந்த புத்தாண்டு மனதில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆண்டு தொடக்கத்தில் 10-ம் இட குரு, 7-ம் இட சனி, அஷ்டம ராகு, தனஸ்தான கேது என்ற அமைப்பில் கிரகங்கள் அமைந்துள்ளன. மார்ச் மாதம் சனி அஷ்டம ஸ்தானத்திற்கும், ஜூன் மாதம் ராகு 7-ம் இடத்திற்கும், கேது ஜென்ம ராசியிலும், குரு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இந்த கிரக நிலைகளின்படி எந்த ஒரு விஷயத்திலும் உறுதியாக, தீர்க்கமாகச் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
உடல் நலனை பொறுத்தவரை சிறு பிரச்சினையாக இருந்தாலும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பலருக்கும் வீடு மனை வாங்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். ஆன்மீக குருவை தேடிக்கொண்டிருந்தவர்கள் குருவை அடைவார்கள். தொழில் மற்றும் உயர் கல்விக்காக வங்கி கடன் பெற விண்ணப்பம் செய்தவர்களுக்கு கடன் கிடைக்கும்.
குடும்பம், பொருளாதாரம்
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் வழியே நன்மைகள் உண்டு. அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து நல்ல பெயர் வாங்குவார்கள். கடன் வாங்குவது, கொடுப்பது ஆகியவற்றில் கவனமாக செயல்பட வேண்டும். அலுவலகம் தவிர, வீட்டிலும் சில பணிகளை மேற்கொண்டு உபரி வருமானம் பெறுவதால் வருமானம் சீராக இருக்கும். பணிபுரியும் பெண்கள் தங்கள் நிறுவனங்களில் நற்பெயரும் பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள். ஓய்வு நேரங்களில் வீட்டை அலங்கரித்து மகிழ்வார்கள்.
தொழில், உத்தியோகம்
டிராவல் பிசினஸ், தங்கும் விடுதி, சுற்றுலா, ரியல் எஸ்டேட் ஏஜெண்ட், ரசாயன தயாரிப்பு மற்றும் விற்பனை, விவசாயம் ஆகிய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். மற்ற தொழில் துறையினர் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். வேளாண் துறையினருக்கு விருதுகள் கிடைத்து, சமூக மதிப்பை பெறுவார்கள். தங்கம், வெள்ளி, நவரத்தினம் வியாபாரம் செய்வதற்கு நல்ல வளர்ச்சி உண்டு. ஏஜென்சி நடத்துபவர்களுக்கு நல்ல ஆதாயம் ஏற்படும்.
கலை, கல்வி
கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி நிறைய ரசிகர்களை பெறுவார்கள். அதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைத்து வருமானம் அதிகரிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை நாட்களிலும் கல்வியில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். அந்த வகையில் சக மாணவர்களது வெற்றிக்கும் உதவியாக செயல்படுவார்கள். கல்விச்சுற்றுலா மற்றும் நண்பர்களோடு திருவிழாக்களில் கலந்து கொள்வர். வேளாண்மை, இன்ஜினியரிங், மருத்துவம் ஆகிய துறை சார்ந்த படித்து முடித்த மாணவர்கள் நல்ல பணியில் அமர்வார்கள். பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் அந்த துறைகளில் பட்டப்படிப்பில் இணைவார்கள்.
கூடுதல் நன்மை பெற..
செவ்வாய்கிழமைகளில் சதுர் தசபுஜ (நான்கு கைகள்) அல்லது அஷ்ட தசபுஜ (எட்டுக்கரங்கள்) துர்க்கைக்கு இளநீர் அபிஷேகம் செய்து, மலர் மாலை சமர்ப்பித்து வழிபடுவது நல்லது. அத்துடன் அவரவர் ஜென்ம நட்சத்திர நாளில் உடல் ஊனமுற்ற எட்டு பேருக்கு இயன்றவரை ஆடை தானம், அன்னதானம் செய்வதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்