2025 புத்தாண்டு ராசி பலன் - ரிஷபம்


2025 புத்தாண்டு ராசி பலன் - ரிஷபம்
x
தினத்தந்தி 25 Dec 2024 6:00 AM IST (Updated: 25 Dec 2024 6:00 AM IST)
t-max-icont-min-icon

தொழில் துறையினருக்கு போட்டி பொறாமைகள் குறைந்து, தொழிலில் புதிய திட்டங்களை அறிவித்து முன்னேற்றம் பெறுவார்கள்.

பொதுப்பலன்கள்

ரிஷப ராசியினருக்கு இந்த புத்தாண்டில் சமூக அந்தஸ்து, மரியாதை ஆகியவை அதிகரிக்கும். பத்தாம் இடத்தில் ராசியதிபதி சுக்கிரனுடன் சனி, ஜென்ம ராசியில் குரு, லாப ஸ்தானத்தில் ராகு என்ற நல்ல அமைப்பின்படியும், மார்ச் மாதம் 11-ம் இட சனி, ஜூன் மாதம் 2-ம் இட குரு, குருவின் பார்வை பெற்ற ராகு என்ற கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையிலும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் நன்மை தரும்.

குடும்ப உறுப்பினர்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள் ஆகியோர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவார்கள். இளமைக்கால நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய தொழில், வர்த்தக முயற்சிகளில் வெற்றி உண்டு. கடனாக கொடுத்திருந்த பணம் எதிர்பாராத விதமாக கைக்கு வந்து சேரும். அரசியல் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பட்டம், பதவிகள் வந்து சேரும்.

குடும்பம், பொருளாதாரம்

சீரான வருமானம் காரணமாக புது வீடு, மனை, சொகுசு வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வீடுகளுக்கு தேவையான ஆடம்பர பர்னிச்சர்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட திருமணங்கள் நல்லவிதமாக நடந்து முடியும். பலரது காதல் பெற்றோர் சம்மதத்தோடு திருமணத்தில் முடியும். குழந்தை இல்லா தம்பதிகளுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் உங்கள் தலையீடு காரணமாக அவை சுமூகமாக தீர்த்து வைக்கப்படும். பெண்மணிகளுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. குடும்ப சுப நிகழ்ச்சிகளை முன்னால் இருந்து நடத்தி வைப்பீர்கள். அந்த விதத்தில் குடும்ப உறவினர்களிடையே உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும்.

தொழில், உத்தியோகம்

தொழில் துறையினருக்கு போட்டி பொறாமைகள் குறைந்து, தொழிலில் புதிய திட்டங்களை அறிவித்து முன்னேற்றம் பெறுவார்கள். தொழில் விரிவாக்க முயற்சிகள் நல்ல லாபத்தை கொடுக்கும். அருகில் உள்ள ஊர்களிலும் புதிய கிளைகளை தொடங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்கள் நட்பை பெற்று சிறப்பாக செயல்படுவார்கள். ஒரு சிலருக்கு விரும்பிய இடத்திற்கு பணி மாற்றம் கிடைக்கும். கடமையில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி நிர்வாகத்தின் மதிப்பை பெறுவீர்கள்.

கலை, கல்வி

கலைத்துறையினர் வெற்றிவாகை சூடும் காலகட்டம் இது. மக்களுடைய அங்கீகாரத்தோடு உங்களுடைய திறமைகள் மிகச்சிறப்பாக வெளிப்படும். வெளியூர், வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பிரபலம் அடைவீர்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பொறுத்தவரை உள்ளரங்க விளையாட்டுகளில் பல சாதனைகளை புரிவர். சிலர் மேற்படிப்புக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். ஆர்க்கிடெக்சர், ரோபோடிக்ஸ், மற்ற டெக்னிக்கல் துறை சார்ந்த மாணவர்கள் உயர் கல்விக்காக அல்லது பணி நிமித்தம் வெளிநாடு செல்வார்கள். படித்து முடித்த மாணவர்கள் சொந்த தொழிலை வெற்றிகரமாக தொடங்கி நடத்துவார்கள்.

கூடுதல் நன்மை பெற..

பள்ளிகொண்ட பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் துளசி மாலை சாற்றி வணங்கி வருவது நல்லது. அவரவருடைய ஜென்ம நட்சத்திர நாளன்று ஆதரவற்ற, வயதான, ஊனமுற்ற பெண்களுக்கு இயன்றவரை பொருள் உதவி, வஸ்திர தானம் அளிப்பது பல நன்மைகளை பெற்று தரும்.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்


Next Story