2025 புத்தாண்டு ராசி பலன் - கும்பம்


2025 புத்தாண்டு ராசி பலன் - கும்பம்
x
தினத்தந்தி 25 Dec 2024 6:30 AM IST (Updated: 25 Dec 2024 6:30 AM IST)
t-max-icont-min-icon

மனதில் ஏற்படும் உற்சாகத்தால் புத்துணர்ச்சியோடு செயல்பட்டு பல வெற்றிகளை பெறுவீர்கள்.

பொதுப்பலன்கள்

கும்ப ராசியினருக்கு ஜென்ம சனி விலகுவதால் மனதில் புதிய உற்சாகமும், நம்பிக்கையும் ஏற்படும். 1-ல் சனி, 2-ல் ராகு, 4-ல் குரு, 8-ல் கேது என்ற நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. மார்ச் மாதம் ஜென்ம சனி விலகி, ஜென்ம ராசிக்கு குரு பார்வை பெற்ற ராகு வருகிறார். அருள் தரும் 5-ம் இடத்திற்கு குரு வருகிறார். கேது 7-ல் அமர்கிறார்.

கடந்த கால சிக்கல்கள் மறைந்து புதிய பாதை கண்களுக்கு தெரியும். தெய்வ வழிபாடு மூலம் சிக்கல்களில் இருந்து மீண்டு வருவீர்கள். பெற்றோர்கள் மனம் மகிழும் வண்ணம் அவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். கடன், நோய், வம்பு வழக்குகள் நல்லவிதமாக தீரும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய முதலீடுகள் மூலம் லாபம் ஏற்படும்.

குடும்பம், பொருளாதாரம்

மனதில் ஏற்படும் உற்சாகத்தால் புத்துணர்ச்சியோடு செயல்பட்டு பல வெற்றிகளை பெறுவீர்கள். சமூக அளவில் புதிய பொறுப்புகள் ஏற்படும். உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். புதிய தொடர்புகள் மூலம் பல நன்மைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களுடைய குற்றம் குறைகளை பெரிதுபடுத்தாமல் அவர்களை அனுசரித்து செல்வீர்கள். சொந்த பந்தங்கள் இடையே உங்களுடைய கருத்துக்கு மதிப்பு அளிக்கப்படும். குடியிருக்கும் வீடுகளுக்கு மராமத்து பணிகள் செய்வீர்கள். புதிய வீடு கட்டுமான பணிகளில் இருந்த தடை தாமதங்கள் நல்லவிதமாக விலகும். வருமானம் பெருகுவதால் பழைய கடன்கள் அடைபடும்.

தொழில், உத்தியோகம்

புதிய தொழில் தொடங்குவது, புதிய தொழில் கிளைகளை ஆரம்பிப்பது ஆகிய முயற்சிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். புதிய வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல இடத்தில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பும், சம்பள உயர்வும் உண்டு. பணி புரியும் பெண்மணிகளுக்கு, சம்பள உயர்வு கிடைப்பதோடு பணி சார்ந்த கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளை பெறுவார்கள். பணி ரீதியாக வேறு இடங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணிகள் மீண்டும் தங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து வாழும் வாய்ப்பு ஏற்படும்.

கலை, கல்வி

பின்னணி இசை, பாடலாசிரியர்கள், நடனம் ஆகிய துறைகளில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து தன வரவை பெறுவார்கள். கலைத்துறையினர் மற்றவர்களை நம்பாமல் தாங்களே களத்தில் இறங்கி செயல்பட்டால் சிறந்த வாய்ப்புகளைப் பெற்று முன்னேறுவார்கள். அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பலருக்கும் புதிய நவீன வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். நடன கலைஞர்கள் பலரும் அரங்கேற்றத்தை நல்ல விதமாக நிறைவேற்றுவார்கள். மாணவர்கள் கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளை பெறுவார்கள். மாணவர்கள் பலரும் தகுதி தேர்வுகளை எழுதி வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள். அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் சிறப்பான வெற்றி பெறுவார்கள்.

கூடுதல் நன்மை பெற..

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அருகில் உள்ள மகாலட்சுமி தாயார் அல்லது அம்பிகைக்கு வாசனை மிகுந்த மலர்மாலை சமர்ப்பணம் செய்வது நல்லது. அத்துடன் ஆதரவற்ற, உடல் ஊனமுற்ற நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் அல்லது செருப்புகள் தானமாக அளிப்பதன் மூலமும் நன்மைகள் பல நாடி வரும்.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்


Next Story