2025 புத்தாண்டு ராசி பலன் - கடகம்


2025 புத்தாண்டு ராசி பலன் - கடகம்
x
தினத்தந்தி 25 Dec 2024 6:00 AM IST (Updated: 25 Dec 2024 6:01 AM IST)
t-max-icont-min-icon

சினிமா துறையினருக்கு இது நல்ல காலம். சிற்ப தொழில் செய்வோர் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள்.

பொதுப்பலன்கள்

கடக ராசியினருக்கு இந்த புத்தாண்டு செல்வம் மற்றும் செல்வாக்கை தரும். வருட தொடக்கத்தில் 3-ம் இட கேது, லாபஸ்தான குரு, அஷ்டம சனி, ராசி அதிபதி 6-ம் இடம் என்ற கிரக அமைப்புகளும், வருடத்தின் பாதிக்கு மேல் குரு விரைய ஸ்தானத்திற்கும், சனி 9-ம் இடத்திற்கும், ராகு, 8-ம் இடத்திற்கும், கேது 2-ம் இடத்திற்கும் மாறுகிறார்கள். கடக ராசியினர் செய்யும் காரியங்களில் வெற்றி அடைவார்கள்.

மனதை ஒருமுகப்படுத்தி எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக முடிக்கும் ஆற்றல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அதை சுமூகமாக தீர்த்து வைப்பீர்கள். சொந்தபந்தங்கள் உங்களுடைய ஆலோசனைகளை நாடி வருவார்கள். ஒரு சிலர் உத்தியோகம் சார்பாக வெளியூர்களுக்கு சென்று சில காலம் தங்கி இருப்பார்கள்.

குடும்பம், பொருளாதாரம்

பூர்வீக சொத்துக்களில் உள்ள சிக்கல்கள் விலகும். கணவன் மனைவி உறவில் சுமுகமான போக்கு ஏற்படும். சிரமப்படும் உறவினர்களுக்கு நீங்கள் பொருளாதார ரீதியாக ஆதரவு அளிக்கும் சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு வைத்தியம் மூலம் குணமடையும். உங்களுடைய பேச்சுக்கு சமூகத்தில் மதிப்பு ஏற்படும். கடன் பிரச்சினைகள் அகலும். பொருளாதார வரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு திடீர் தனவரவு ஏற்படும். பெண்கள் சுயதொழில் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பலரும் பெடிக்யூர், மெனிக்யூர், மெஹந்தி, ஹேர் டிரஸிங் உள்ளிட்ட அழகு சாதனப் பயிற்சிகளை பெற்று உற்சாகமாக சுய தொழிலில் இறங்கி சாதிப்பார்கள்.

தொழில், உத்தியோகம்

பர்னிச்சர், ஆடம்பர பொருள்கள், வேளாண் விளைபொருள் ஆகிய தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. தொழில் அதிபர்கள் சமூக அந்தஸ்துமிக்க விருதுகளை பெறுவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு சிறந்த காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்கள் குடும்பத்தார் விருப்பப்படி குழந்தைகளோடு சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்களுடைய தனித்திறமை காரணமாக பணியிடத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கலை, கல்வி

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். சக கலைஞர்கள் உதவிகரமாக செயல்படுவர். கலைஞர்களுக்கு சமூக மதிப்புமிக்க விருதுகள் கிடைக்கும். சினிமா துறையினருக்கு இது நல்ல காலம். சிற்ப தொழில் செய்வோர் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். சிவில் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர், மெக்கானிகல் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பார்கள். பள்ளி மாணவர்கள் எதிர்கால நலனுக்காக திட்டமிட்டு செயல்படுவார்கள். மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பொருளாதார வசதி கிடைக்கும்.

கூடுதல் நன்மை பெற..

முக்கிய முடிவு எடுக்கும் சமயத்தில் தங்கள் ஆன்மீக குருமார்களிடமோ, பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களிடமோ ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று குலதெய்வத்துக்கு பால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்வதும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள் ஆகியவற்றை தானமாக வழங்குவதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்


Next Story