வார ராசிபலன் 19.5.2024 முதல் 25.5.2024 வரை
12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்;
இந்த வார ராசிபலன்:
மேஷம்
உறவினர்களுடன் வெளிப்படை தன்மையுடன் இருப்பீர்கள். இதனால் அவர்களுடனான உறவு மேம்படுவதுடன் விரோதம், கலகம் ஆகிய விஷயங்களை பெரிதும் தவிர்த்துக் கொள்வீர்கள். எதிர்பாராத பண வரவும், செலவுகளும் சம அளவு இருக்கும். உங்கள் பக்குவமான பேச்சு, பகைவர்களையும் வெல்வீர்கள். அதனால், நீங்கள் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தங்கம், செப்பு பாத்திரம் முதலான வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும். பெண்கள் வீட்டுக்கு தேவையான உணவு தானியங்கள் வாங்கி பத்திரப்படுத்தி வைப்பீர்கள்.
ரிஷபம்
பிறருடைய தலையீட்டால், உங்களுக்கு பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு உத்தியோக உயர்வும் உண்டு. மற்றவர்கள் உங்கள் மீது எடுக்கும் பாதகமான முடிவுகள், உங்களுக்கு சாதகமாக மாறும் நிலை ஏற்படும். வாரத்தின் முற்பகுதியில், ஆடை அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டு. பிற்பகுதியில் மனைவி, மக்களுடன் மகிழ் உலா சென்று வருவீர்கள். சிலர், உங்கள் புகழுக்கும், கற்ற கல்விக்கும் பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடப்பார்கள். அதை நீங்கள் திறம்பட சமாளிப்பீர்கள். பெண்களுக்கு சில சவால்களை எதிர்கொள்ளும் வாரம் இது.
மிதுனம்
நீங்கள் வாடகை வீட்டிலிருந்தால், கூடுதல் வசதிகளுடன் உங்கள் விருப்பப்படி வேறு வீட்டுக்கு மாறுவீர்கள். சொந்த வீடாக இருந்தால், அதன் மராமத்து பணிகள் வாயிலான செலவுகள் ஏற்படும். உங்களுடைய கையிருப்பை குறைக்கும். எனினும் வீடு மாற்றம் உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கும். கணவன், மனைவி இடையே இன்பத்துக்கு குறைவு இல்லை. சிலருக்கு சருமத்தில் பாதிப்பு ஏற்பட்டு குணமாகும். தொழில் சம்பந்தமான ஆயுதங்களை, வேலையின் போது சற்று கவனமுடன் கையாளுங்கள். பெண்கள் அலுவலக வேலையுடன், வீட்டு வேலையும் சேர்த்து கூடுதல் சுமை உண்டாக்கும்.
கடகம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பகைவர்கள் உங்கள் செயலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவார்கள். ஆனாலும், நீங்கள் அதற்கு சற்றும் மனம் தளரமாட்டீர்கள். ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செலவுகளை செய்யுங்கள். வீண் செலவு என்று தெரிந்தும் பண நஷ்டத்தை எதிர்கொள்ளாதீர்கள். வாரத்தின் முற்பகுதியில் ஏற்படும் தனவரவை, வாரத்தின் பிற்பகுதியில் ஏற்படும் செலவுக்கு ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் எதிர்காலத் தேவைக்காக, சிறு தொகையை சேமித்துக் கொள்வீர்கள்.
சிம்மம்
நீங்கள் போட்டு வைத்த திட்டத்தை திடீரென மாற்றுவீர்கள். இது உங்களுக்கு பணம் முடக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு அரசாங்கத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். சிலர் உங்கள் மீது பொறாமையால் தலைகுனிவை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவார்கள். நீங்கள் எதிர்பாராத வகையில் எதிர்பாலினத்தவர் உங்களுக்கு உதவி செய்வார்கள். இது உங்களுக்கு மனதுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியும் தரும். தடாலடியாக சிலர் தான் வகித்து வந்த பதவியை துறந்து, மாற்று சிந்தனையில் ஈடுபடுவீர்கள். பெண்கள் எதிர்ப்புகளை தக்க படி சமாளிக்கும் வாரம் இது.
கன்னி
கல்வி, தொழில்நுட்பம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள், சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் அமையலாம். அங்கு உங்கள் திறமைக்கு பாராட்டுகள் குவியும். நீங்களே உங்கள் திறமையை கண்டு வியக்கும் வாரம் இது. எதிர்பாலினத்தவருடன் பழகும் போது சற்று கவனத்துடன் உங்கள் பேச்சு இருக்கட்டும். அவர்கள் உங்களைப் பற்றி அவதூறு பேசக்கூடும். காதலர்கள் நேருக்கு நேர் சந்தித்து மனம் விட்டு பேசுவார்கள். கடன் தொல்லைகள் அகலும். பகைவரை வெற்றி கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
துலாம்
மன அமைதிக்கு சிலர் மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்று வழிபடுவீர்கள். அவர்களின் அருளை பெறுவீர்கள். சிலர் சமயப் பெரியோர்களை வீட்டுக்கு அழைத்து, உபசரித்து, அவர்களின் ஆசிகளை பெறுவீர்கள். சிலர் கண் மருத்துவரை அணுகி, உங்கள் பார்வையை சரிசெய்து, புதிய கண்ணாடிகள் வாங்கி அணிவீர்கள். சிலருக்கு பித்தம் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு அகலும். பயணத்தின் போது கூடுதல் கவனம் தேவை. இதனால் களவு போவதை தவிர்க்கலாம். பெண்களுக்கு வீட்டு உபயோக மின் சாதனங்கள் வாயிலான செலவை உண்டாக்கும்.
விருச்சிகம்
தொழில் சம்பந்தமாக கணவன் மனைவி வேறு வேறு இடம் என்று இருந்த நிலை மாறி ஒன்று சேரும் வாரம் இது. விரும்பிய இடத்திற்கு சிலருக்கு பணியிட மாற்றம் உண்டாகும். காதலர்கள் சந்தித்து தங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ளும் வாரம் சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான உடல் பாதைகள் ஏற்படக்கூடும். சுய மருத்துவத்தை தாருங்கள் சிறந்த மருத்துவர் பெறுங்கள் வாரத்தின் பிற்பகுதியில் காரிய தடை தாமதம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சிலர் குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று லாபம் திரும்ப வாய்ப்புகள் உருவாகும் வாரம் இது. பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
தனுசு
கடந்த சில வாரங்களாக மகிழ்ச்சியில் ஆழ்த்திய பல விஷயங்கள் இந்த வாரமும் தொடரும். எனினும் சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று தோய்வு ஏற்பட்டு விலகும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. இது வயிறு சம்பந்தமான உபாதைகளில் இருந்து பாதுகாக்க உதவும். சிலர் பழைய வாகனங்களை விற்று, நவீன வாகனங்கள் வாங்கி, உல்லாச பயணம் செல்வீர்கள். சிலருக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி அமையும் வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இந்த வாரம் அமையும்.
மகரம்
வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு மந்தமான சூழலில் இருக்கிறதே என்று சிலர் வருத்தம் கொள்வீர்கள். இனி கவலையை விடுங்கள். மிக லாபகரமான செய்தி உங்களுக்கு வந்து சேரும். அது தொழில், வியாபாரம் மற்றும் உயர்கல்வி சம்பந்தமானதாக இருக்கும். சிலருக்கு பணி சம்பந்தமான வெளிநாட்டு தொடர்பு மற்றும் தகவல்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு, குடும்ப நலன் கருதி, வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து, உள்நாட்டிலேயே பணி செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பெண்களுக்கு இதுவரை இருந்து வந்த விரயங்கள் மாறி சேமிப்புகள் உருவாகும் நிலை ஏற்படும்.
கும்பம்
வேற்று மதம், மொழியினரால் மிகுந்த ஆதாயம் கிட்டும். சிலருக்கு அவர்களாலேயே விரயமும் உண்டு. உங்கள் சொல்வாக்கு, ஆரோக்கியம் மிக நல்லபடியாக அமையும் வாய்ப்புகள் உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நவீன சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்வீர்கள். அது உங்கள் விருப்பப்படி சாதகமானதாக இருக்கும். தம்பதிகள் சிலருக்கு வீட்டில் புதிதாக மழலைச் சத்தம் கேட்கும் யோகம் உண்டு. புதிய பதவிகள் சிலருக்கு கிடைத்து, அதன் வாயிலான லாபத்தையும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். பெண்கள் மனதில் பட்டதை பளிச்சென்று தெரிவித்து பாராட்டு பெரும் வாரம் இது.
மீனம்
சிலர் ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள். சிலர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்று திரும்பும் சூழ்நிலை அமைய வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு அரசியல், அரசு ரீதியிலான பட்டங்களும், பதக்கங்களும், பதவிகளும் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் சொல்வாக்கும் மேலோங்கும். செலவுகள் அதிகம் இருந்தாலும், தன வரவுக்கு கொஞ்சமும் பங்கம் இல்லை. கவலையே வேண்டாம். சிலர் மன அமைதிக்காக கோடை வாசஸ்தலங்களுக்கு சென்று, மகிழ்ச்சியுடன் திரும்பிவீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமானதாக இருக்கும்.