உலக மக்கள் தொகை தினம்.. அதிக மக்கள் தொகை கொண்ட டாப்-10 நாடுகள்
மக்கள் தொகையில் முதலிடம் வகித்த சீனாவை கடந்த ஆண்டு பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்துக்கு வந்தது.;
உலக அளவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் உணவு பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை. வளப்பற்றாக்குறை உள்ளிட்டவைகள் உண்டாகும். மக்கள் தொகை பெருக பெருக உணவு, குடிநீர், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அரசு எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு, பல்வேறு சவால்களுக்கு வழிவகுத்துள்ள மக்கள் தொகை பிரச்சினை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1989-ம் ஆண்டு முதல் மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் 35-வது மக்கள்தொகை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், பிரசவ காலத்தில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது. சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும், தீர்வுகளை கொண்டு வருவதற்கும், நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தரவுகளை சேகரிப்பதில் அக்கறை காட்டவேண்டியது அவசியம் என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள் உணர்த்துகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய மக்கள் தொகை 2018-ம் ஆண்டு நிலவரப்படி 134 கோடியே 80 லட்சம். இது உலக மக்கள் தொகையில் (760 கோடி) 17.74 சதவீதம். மக்கள் தொகையில் முதலிடம் வகித்த சீனாவை கடந்த ஆண்டு பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்துக்கு வந்தது. இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 142.86 கோடி எனவும் சீனாவின் மக்கள்தொகை 142.57 கோடி எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட டாப்-10 நாடுகளை பார்ப்போம்.
1. இந்தியா- 144.17 கோடி
2. சீனா - 142.51 கோடி
3. அமெரிக்கா - 34.15 கோடி
4. இந்தோனேசியா - 27.97 கோடி
5. பாகிஸ்தான் - 24.52 கோடி
6. நைஜீரியா - 22.91 கோடி
7. பிரேசில் - 21.76 கோடி
8. வங்காளதேசம் - 17.47 கோடி
9. ரஷியா - 14.39 கோடி
10. எத்தியோப்பியா - 12.97 கோடி
மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்து, வளர்ச்சியை வலுப்படுத்துவது தொடர்பாக உறுதி மொழி ஏற்கப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்கின்றனர்.