இன்று உலக நுகர்வோர் உரிமைகள் தினம்.. முறைகேடுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உறுதியேற்போம்..!

நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.;

Update:2024-03-15 14:20 IST

நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களை நியாயமான விலையில், தூய்மையான நிலையில், சரியான அளவில் பெறுவதற்கு உரிமை உண்டு. இந்த உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நியாயமற்ற நடைமுறைகள், பாகுபாடுகள் மற்றும் சுரண்டலுக்கு எதிராக நுகர்வோரை பாதுகாக்கும் வகையிலும், ஆண்டுதோறும் மார்ச் 15-ம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு உலக நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள் 'நுகர்வோர்களுக்கான நியாயமான மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு' என்பதாகும். நமது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை சுட்டிக் காட்டுவதுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நுகர்வோரின் உரிமைகளை மதித்து அவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை இந்த கருப்பொருள் உணர்த்துகிறது.

1962-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப். கென்னடி அமெரிக்காவில் நுகர்வோர் உரிமைகள் குறித்து உரையாற்றினார். நுகர்வோர் உரிமைகள் பற்றி அப்போது அவர் பேசியது, முதல் உலகம் முழுவதும் எதிரொலித்தது.1983 மார்ச் 15-ம் தேதி முதல் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அப்போது இருந்து, ஐக்கிய நாடுகள் சபை இந்த சிறப்பு தினத்தை அங்கீகரித்துள்ளது.

சுரண்டல் மற்றும் பல தவறான நடவடிக்கையில் இருந்து நுகர்வோர்களை பாதுகாக்க நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நமக்கான நுகர்வோர் உரிமைகளைப் பற்றி நமக்கு நாமே அறிந்துகொள்வதுடன், அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை அறிவதுதான் இந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கான சிறந்த நோக்கம். இந்நாளில் மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், முறைகேடுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதிலும் அதிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, நுகர்பொருட்கள் குறித்த சந்தேகங்களை கேட்கும் உரிமை, குறைகள் தொடர்பாக முறையிடும் உரிமை மற்றும் நுகர்வோர் கல்விக்கான உரிமை என சில அடிப்படை உரிமைகள் நுகர்வோருக்கு உள்ளன. இந்த உரிமைகள், நுகர்வோர்களுக்குத் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், குறைகளுக்குத் தீர்வு காணவும் அதிகாரம் அளிக்கிறது.

நுகர்வோர்கள் தங்கள் உரிமைகள் குறித்து அறிந்து அதனை எப்போதும் கடைப்பிடிப்பது முக்கியம். நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி புகாரளித்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் அபராதத் தொகை பெற வழிவகை உள்ளது. வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் பொதுவாக அதிக விலை வசூலித்தல், தயாரிப்பில் கலப்படம், எடை மற்றும் அளவீட்டில் ஏமாற்றுதல், தயாரிப்பு தரம் குறைவு உள்ளிட்ட புகார்கள் இதில் அடங்கும்.

Tags:    

மேலும் செய்திகள்