ஆரோக்கிய வாழ்வுக்கு இது அவசியம்.. இன்று உலக தேங்காய் தினம்..!

தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களில் நம் உடலுக்குத் தேவையான பலவிதமான சத்துகள் அடங்கியுள்ளன.

Update: 2024-09-02 09:34 GMT

மனித சமூகத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் தேங்காயின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.

1969-ம் ஆண்டு தென்னை சாகுபடி செய்யும் நாடுகளை உள்ளடக்கிய, 'ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம்' (APCC)நிறுவப்பட்டது. ஐ.நா. அமைப்பின் கீழ் நிறுவப்பட்ட இந்த ஆசிய பசிபிக் தேங்காய் சமூகத்தின் மாநாடு 1998-ம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தேங்காய் சமூகம் நிறுவப்பட்ட செப்டம்பர் 2-ம் தேதியை, உலக தேங்காய் தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

எனினும், 2009-ம் ஆண்டு முதல் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா , பிலிப்பைன்ஸ் , தாய்லாந்து , கென்யா மற்றும் வியட்நாம் போன்ற தென்னை உற்பத்தி செய்யும் நாடுகளில், தேங்காய் பயன்பாட்டை ஊக்குவித்தல், தென்னை வளர்ப்பு முறைகள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் தேங்காயின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான உலக தேங்காய் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேங்காயின் நன்மைகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்தும் பதிவிட்டுள்ளனர்.

பல வெப்பமண்டல பகுதிகளில் விவசாயம், ஊட்டச்சத்து மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் தேங்காய் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களில் நம் உடலுக்குத் தேவையான பலவிதமான சத்துகள் அடங்கியுள்ளன.

தேங்காய் சுவையானது. தேங்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.

இளநீர் ஒரு இயற்கை எலக்ட்ரோலைட் நிறைந்த பானம். வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் நிவாரணம் கிடைக்கும். தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் அருந்துவது நல்லது.

தேங்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய், இயற்கை மாய்ஸ்சரைசர் மற்றும் ஹேர் கண்டிஷனர் ஆகும்.

எனவே, தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த உணவுப் பொருட்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி ஆரோக்கியம் காப்போம்!

Tags:    

மேலும் செய்திகள்