காபியின் வரலாற்றை அறிந்துகொள்வோம்..!

1,300 ஆண்டுகளுக்கு முந்தைய புராண கதையின்படி, காபியின் தாயகம் எத்தியோப்பியா என்பது தெரியவருகிறது.;

Update:2024-01-13 17:43 IST

வயது வித்தியாசமின்றி பருகி மகிழும் காபியின் சுவையான வரலாற்று தகவல்களை பார்ப்போம்.

காபி, ஒரு மலை தோட்டப் பயிர். புதர்ச்செடி வகையை சேர்ந்தது. பதப்படுத்தப்படாத கொட்டையில் இருந்து காபி பயிர் வளர்கிறது. ஒரு சில வருடங்களில் பலன் தருகிறது. சிவப்பு நிற பெர்ரி பழம்போல் அதில் காபி பழங்கள் விளைகின்றன.

பெரும்பாலான காபி பழங்களில் இரு கொட்டைகளும், சிலவற்றில் ஒரு கொட்டையும் இருக்கும். கொட்டைகளின் மேல்பகுதியில் பசை போன்ற படலம் ஒட்டியிருக்கும். அதனை போக்க ஊறவைத்தல், புளிக்கவைத்தல், அலசுதல், அகற்றுதல், உலர்த்துதல் போன்ற நடைமுறைகள் நுட்பமாக கையாளப்பட்ட பின்பு, சுவைக்குரிய காபி கொட்டைகள் கிடைக்கின்றன. அடுத்து வறுக்கப்படுகிறது. கொட்டைகளை வறுப்பதுதான் காபியின் சுவைக்கு அடிப்படை என்பதால், இது மிக முக்கியமான செயல்பாடு. 500 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்கள் வறுகலன்களை உருவாக்கி, கொட்டைகளை வறுத்து காபி தயாரித்திருக்கிறார்கள்.

காபி எப்படி அல்லது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? என்பது குறித்து மிகச்சரியான தகவல் இல்லை. இருப்பினும் காபியின் தோற்றம் பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. அதில் சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய கதையும் ஒன்று.

எத்தியோப்பியாவின் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆடு மேய்ப்பதுதான் தொழில். அன்றாடம் மேய்ச்சல் முடிந்ததும், மாலை மயங்கும் நேரத்தில் ஆடுகளை கொண்டு வந்து 'கிடை'யில் அடைத்துவிட்டு, இரவில் அருகில் உள்ள குடிசையில் அவரும் தூங்கி விடுவார்.

அன்றொரு நாள் இரவில் அவர் சோர்வில் தூங்கிவிட, ஆடுகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன. மேய்ப்பவருக்கு காரணம் புரியவில்லை. மறுநாள் விடியலில் எப்போது திறந்துவிடுவார்கள் என்று காத்திருந்த ஆடுகள், திறந்துவிட்டதும் முதல் நாள் மேய்ந்த மலைப்பகுதிக்கு சென்று குறிப்பிட்ட செடிகளை போட்டிப்போட்டு தின்றன. அன்று இரவும் கிடையில் அவை தூங்காமல் உற்சாகத் துள்ளாட்டம் போட்டன.

ஆடுகள் வித்தியாசமான எதையாவது தின்றுவிட்டால், அவைகளின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அனுபவத்தால் உணர்ந்து வைத்திருந்த அந்த ஆடு மேய்ப்பவர், 'குறிப்பிட்ட அந்த செடியில்தான் ஆடுகளை துள்ளாட்டம் போடவைத்த ஏதோ ஒரு அம்சம் இருக்கிறது' என்பதை உணர்ந்து, மறுநாள் ஆடுகளோடு சென்று அவரும் அந்த செடியின் இலைகளையும், பூவையும் சுவைத்தார். அதன் மணமும், சுவையும் அவருக்கும் உற்சாகத்தை தந்தது. அந்த விஷயம் பரவியது. காபி பழம், கொட்டை போன்றவைகளை சுவைத்து மகிழ்ந்த மக்கள் பின்பு கொட்டையில் இருந்து காபி தயாரித்தும் பருகியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது, அந்த கதை.

அக் கதை மூலம் காபியின் தாயகம் எத்தியோப்பியா என்பதும், அதை கண்டறிந்தவர்கள் அங்குள்ள மலைப் பகுதியை சேர்ந்த 'ஒரோமோ' என்ற பழங்குடியின மக்கள் என்பதும் தெரியவருகிறது.

இந்த நவீன காலத்தில் உலகம் முழுவதும் பலவிதமான சுவைகளில், பலவிதமான பெயர்களில் 'காபி ஷாப்'கள் இயங்கி வருகின்றன. அங்கெல்லாம் மக்கள் ஒரு கப் காபியுடன் கூடியிருந்து பேசுகிறார்கள்.. மணிக்கணக்கில் விவாதிக்கிறார்கள்..! இந்த கலாசாரம் இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 450 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கிறது.

எத்தியோப்பியாவில் தோன்றிய காபியை உலகின் பல பகுதிகளுக்கும் பரப்பினார்கள். அப்படியாக, கி.பி.1554-ல் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அரேபிய வியாபாரிகள் முதன்முதலில் காபி கடைகளை திறந்ததாக சரித்திர சான்றுகள் சொல்கின்றன. அதற்காக உரிமம் பெறுவதும் நடைமுறையில் இருந்திருக்கிறது. இப்போதும் எத்தியோப்பியாவில் இருந்து காபி அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.

துருக்கியர்கள் அங்கே ஹூக்கா புகைத்தபடி காபி பருகியிருக்கிறார்கள். அந்த 'ஸ்டைலும்', சுவையும் மக்களை வெகுவாக கவர, ஏராளமானவர்கள் அத்தகைய காபி கடைகளை நாடிவந்து, பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.

அப்போதைய மன்னரின் நிர்வாகம் பற்றியும், அவரை குறை கூறுவது போலவும் அவர்கள் அங்கே கூடியிருந்து விவாதிக்க, அந்த தகவல் ஒற்றர்கள் வழியாக மன்னரை அடைய மன்னர், அத்தனை காபி கடைகளையும் இழுத்துப் பூட்ட உத்தரவிட்டிருக்கிறார்.

மன்னர் அதோடு விடவில்லை. காபி கொட்டைகளை எல்லாம் பறிமுதல் செய்து நீர்நிலைகளில் கொண்டுபோய் கொட்ட உத்தரவிட்டார். காபி குடிப்பவர்களுக்கு கசையடி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். சில வருடங்கள் கடந்ததும் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் காபி கடைகள் திறந்து செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன.

கிராமப்புறங்களில் இப்போதும் காலை நேரத்தில் டீக்கடைகளில் மக்கள் அமர்ந்திருந்து, ஒரு நாளிதழை பலர் படிப்பதையும், நாட்டு நடப்புகளை அலசு வதையும் காணமுடியும். இந்த கலாசாரமும் பழங்கால காபி கடைகளில்தான் தொடங்கியிருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்