ராமாயணம் பயணித்த இடங்கள்

இந்த பூமியில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் எடுத்த ஏழாவது அவதாரம், ராம அவதாரம். இந்த அவதாரத்தின் அருமை-பெருமைகளை சொல்வதுதான் ராமாயணம்.;

Update:2023-07-23 07:26 IST

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றாக விளங்கும் ராமாயணம் வால்மீகி முனிவரால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட மாபெரும் இதிகாசம். திரேதா யுகத்தில், அதாவது கி.மு. 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் ராமாயண கதை நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. திரேதா யுகத்தில் அயோத்தியை தலைநகராக கொண்டு கோசல நாட்டை ஆண்ட ரகுவம்சத்தைச் சேர்ந்த மன்னன் தசரதனின் மூத்த மகனான ராமபிரான், அவரது மனைவி சீதாதேவி ஆகியோரின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் எழுதப்பட்ட மிகப்பழமையான நூல்தான் இது.

தந்தையின் கட்டளையை ஏற்று மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்கிறார் ராமர். அங்கு சீதையை இலங்கை வேந்தன் ராவணன் கடத்திச் செல்ல, அந்நாடு சென்று தனது மனைவியை மீட்டு வரும் ராமபிரான், வனவாசம் முடிந்து நாடு திரும்புவதுதான் ராமாயணத்தின் கதை.

'ராமன்' மற்றும் 'அயனம்' என்ற இரு சொற்களின் சேர்க்கைதான் 'ராமாயணம்' ஆனது. 'அயனம்' என்றால் சமஸ்கிருத மொழியில் பயணம் என்று பொருள். எனவே ராமாயணம் என்பதற்கு 'ராமனின் பயணம்' என்று பொருள்.

உயர்ந்த நெறிமுறைகளை கடைபிடிக்கும் ஏகபத்தினி விரதனான ராமபிரானின் மாண்புகளை மனிதகுலத்துக்கு எடுத்துச் சொல்வதோடு, அன்றைய காலகட்டத்தில் இளவரசர்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் மனைவிகளுக்குள் நிலவிய போட்டி மனப்பான்மை, சகோதரர்களுக்கு இடையேயான அன்பு, விசுவாசம், இளவரசிகளை மணம் முடிப்பதற்காக நடத்தப்படும் போட்டிகள், எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் மனம் தடுமாறி பிறன்மனை நாடினால் ஏற்படும் அழிவு போன்றவற்றை பற்றி விவரிக்கிறது ராமாயணம்.

திருமாலின் 10 அவதாரங்களையும் பற்றி ஒரு பாடலில் குறிப்பிட்ட கவிஞர் கண்ணதாசன், ''ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும் உயர்வினை காட்டிய அவதாரம்'' என்று ராம அவதாரம் பற்றி பெருமையுடன் கூறி இருப்பார்.

ராமாயணம் 7 காண்டங்களை கொண்டது. இதில் பால காண்டம் ராமர், லட்சுமணன், பரதன், சத்ருகன் ஆகிய 4 சகோதரர்களின் பிறப்பு, கல்வி பற்றி இளமைக்கால பகுதியையும், அயோத்தியா காண்டம் ராமர் சீதையை மணம் முடித்து பின்னர் அயோத்தியில் இளவரசனாக வாழ்ந்த காலத்தையும், ஆரண்ய காண்டம் ராமன் காட்டுக்கு சென்றது, அங்கு வாழ்ந்தது, இலங்கை வேந்தனான ராவணன் சீதையை கடத்திச் சென்றது போன்றவற்றையும், கிஷ்கிந்தா காண்டம் சீதையை தேடிச் செல்லும் ராமன் வானரர்களின் அரசனான சுக்ரீடனை சந்திப்பதையும் சொல்கிறது. அனுமன் இலங்கை சென்று சீதையை சந்திப்பது; ராவணனின் கோட்டையை தீவைத்து எரிப்பது போன்றவற்றை சுந்தர காண்டமும், இலங்கையில் ராவணனுக்கும் ராமருக்கும் இடையே நடக்கும் போரை யுத்த காண்டமும், போர் முடிந்து ராமர் அயோத்தி திரும்பி முடிசூடியது; சீதையை காட்டுக்கு அனுப்பியது உள்ளடக்கிய சம்பவங்களை உத்தரகாண்டமும் விவரிக்கிறது.

வால்மீகி ராமாயணத்தில் 24 ஆயிரம் பாடல்கள் உள்ளன. கவிதை வடிவிலேயே கதையை சொல்லி இருக்கிறார், வால்மீகி.

கதை நடந்த காலகட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் ராமாயணத்தின் காலம் மகாபாரதத்துக்கு முந்தியது ஆகும்.

மகாபாரதத்தின் 18 பருவங்களில் 3-வது பருவமான ஆரண்ய பருவம், சொக்கட்டான் ஆட்டத்தில் கவுரவர்களிடம் தோல்வியுற்று காட்டில் வசிக்கும் பாண்டவர்களின் 12 ஆண்டு வனவாச காலத்தை விவரிக்கிறது. இந்த ஆரண்ய பருவத்தில் மார்க்கண்டேய முனிவர் ராமாயண சம்பவங்களை தர்மருக்கு எடுத்துரைப்பதாக வருகிறது. இதன் மூலம், ராமாயணம் நடந்த காலம் மகாபாரதத்துக்கு மிகவும் முந்தியது என்பது உறுதியாகிறது.

வால்மீகி ராமாயணத்தை தழுவியே பின்னர் தமிழிலும், பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் ராமாயணம் எழுதப்பட்டது.

வால்மீகி ராமாயணத்தை தழுவி கி.பி.12-ம் நூற்றாண்டில் 'கவிச்சக்கரவர்த்தி' கம்பர் தமிழில் எழுதிய 'ராமாவதாரம்' என்ற ராமாயண கதை, 'கம்ப ராமாயணம்' என அழைக்கப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் இல்லாத சில விஷயங்களையும், தமிழ் மக்களிடையே காலம் காலமாக பேசப்பட்டு வந்த ராமாயண கதைகளில் உள்ள அம்சங்களையும் சேர்த்து மெருகேற்றி, தமிழ் மரபின்படி கம்பர் தனது ராமாயணத்தை எழுதினார். இதனால், 10 ஆயிரத்து 589 பாடல்களை கொண்ட கம்ப ராமாயணத்தில் இலக்கிய சுவையும், நயமும் சற்று அதிகமாக இருக்கும்.

கம்பர் ராமாயணத்தை எழுதும் முன்பே சங்க இலக்கியங்களான அகநானூறு (கி.மு.முதல் நூற்றாண்டு), புறநானூறு (கி.மு. 3-ம் நூற்றாண்டு), மற்றும் இரட்டை காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ராமாயண கதை பற்றிய குறிப்புகள் உள்ளன.

இந்தியில் துளசிதாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், ஒரியா மொழியில் பலராம்தாசும், வங்காள மொழியில் கிரிட்டிபாஸ் ஓஜாவும் ராமாயணத்தை எழுதி உள்ளனர். இதேபோல் தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் எழுதப்பட்டு இருக்கிறது.

தாய்லாந்து நாட்டின் 'தாய்' மொழியில் 'ராம்கியென்' என்ற பெயரிலும், மலேசிய நாட்டின் 'மலாய்' மொழியில் 'இக்காசயத்சேரி ராமா' என்ற பெயரிலும், லாவோஸ் நாட்டின் 'லாவோ' மொழியில் 'பிராலாக் பிராலாம்' என்ற பெயரிலும், கம்போடியாவின் 'கெமர்' மொழியில் 'ரீம்கெர்' என்ற பெயரிலும் ராமாயணம் எழுதப்பட்டு இருக்கிறது.

அயோத்தியில் பிறந்த ராமபிரான் விதேக நாட்டின் மன்னன் ஜனகனுக்கு மகளாக பிறந்த சீதையை மதிலையில் (ஜனக்பூர்) மணம் முடித்தார். விதேக நாடு என்பது தற்போதைய நேபாளம் ஆகும். சீதையின் அழகில் மயங்கிய ராவணன் அவளை இலங்கைக்கு கடத்திச்சென்றான். இதனால் இந்தியா, நேபாளம், இலங்கை என 3 நாடுகளில் பயணிக்கிறது ராமாயண கதை.

இந்தியாவில் அயோத்தி தவிர வேறு எங்கெங்கெல்லாம் ராமாயண கதை பயணப்பட்டிருக்கிறது என சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது அந்த இடங்களில் ராமாயணம் தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளன.

அவற்றில் சிலவற்றை காணலாம்...

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்தி நகரில்தான் ராமபிரான் பிறந்தார். ராமர் பிறந்த இடம் ராமஜென்ம பூமி என அழைக்கப்படுகிறது. அங்கு ராமருக்கு தற்போது பிரமாண்டமான கோவில் கட்டப்படுகிறது.

சீதை பிறந்த ஜனக்பூர் நேபாள தலைநகர் காட்மாண்டுவுக்கு தென் கிழக்கே இந்திய எல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. முன்பு இந்த இடம் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் இருந்தது. இப்போது நேபாளத்தில் உள்ளது. சீதாதேவி ஜனக மன்னனுக்கு பிறந்தவர் அல்ல என்பதும் அவரது வளர்ப்பு மகள் என்பதும் நாம் அறிந்ததே. குழந்தை இல்லாமல் இருந்து ஜனகனுக்கு, நிலத்தை உழுத போது பேழையில் இருந்த கிடைத்தவர்தான் சீதாதேவி. சீதை பிறந்த இடம் சிதர்மஹி என அழைக்கப்படுகிறது. வில்லை ஒடித்து ராமர் சீதையை மணம் முடித்த நாளான விவாக பஞ்சமி தினத்தன்றும், ராமர் பிறந்த தினமாக ராமநவமி அன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதர்மஹி சென்று வழிபடுகிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்மிக்கும் இடம்தான் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரம். இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என தந்தை தசரதனின் கட்டளைப்படி தனது மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன் 14 ஆண்டு வனவாசம் புறப்பட்ட ராமர் பிரயாக்ராஜ் வழியாகத்தான் கங்கையை கடந்து சென்றார். அப்போது இங்குள்ள பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்தில் அவர்கள் சில நாட்கள் தங்கி இருந்தனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றது. உலகிலேயே அதிக மக்கள் கூடும் விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர் அமிதாப்பச்சன் இந்த ஊரில்தான் பிறந்தார் என்பது கூடுதல் தகவல்.

ராமர் வனவாசம் சென்ற போது தந்தை தசரதன் இறந்து விடுவார். இதைத்தொடர்ந்து தனது அண்ணன் ராமரை தேடி வரும் பரதன் (கைகேயின் மகன்) சித்ரகூட் என்ற இடத்தில் அவரை சந்தித்து தந்தை இறந்த தகவலை சொல்லி அயோத்திக்கு திரும்பி வருமாறு அழைப்பான். பரதன் ராமரை சந்தித்த இடமான சித்ரகூட் உத்தரபிரதேசம்-மத்தியபிரதேச மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது, தற்போது ஒரு சிறிய நகரமாக விளங்கும் இங்கு நிறைய இந்து கோவில்கள் உள்ளன.

வனவாசம் சென்ற ராமர் தண்டகாரண்யத்தில் இருந்த போது அங்கு தாங்கள் தங்குவதற்கு ஒரு குடிசையை அமைப்பார். ராவணனின் தங்கை சூர்ப்பனகை, தண்டகாரண்யத்தில்தான் முதன் முதலாக ராமரை பார்ப்பாள். அப்போது ராமரின் அழகில் மயங்கிய அவள், அவரை மணப்பது என்று தீர்மானிப்பாள். இந்த தண்டகாரண்யம் என்பது தற்போது சத்தீஷ்கார், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் எல்லைகளையொட்டி அமைந்துள்ள பரந்து விரிந்த வனப்பகுதி ஆகும். இங்குதான் புகழ்பெற்ற துத்சாகர் அருவி உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1,916 அடி உயரத்தில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நாசிக் நகரம் ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஊர். ராமர், சீதை, லட்சுமணன் தங்கி இருந்த பஞ்சவடி (பர்ணசாலை) பகுதிக்கு வரும் சூர்ப்பனகை, ராமரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூற, வாக்குவாதம் ஏற்படும். அப்போது கோபமுற்ற லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை (நாசி) அறுத்து விடுவான். மூக்கை அறுத்ததால் அந்த இடம் நாசிக் என அழைக்கப்படுகிறது. அந்த பஞ்சவடி இருந்த இடம்தான் இப்போதைய நாசிக் நகரம்.

ராவணனின் கட்டளையை ஏற்று மாயமான் வேடம் தரித்து தண்டகாரண்யம் வரும் மாரீசன், இந்த பஞ்சவடியின் முன்புதான், சீதையின் கவனத்தை ஈர்ப்பதற்காக அங்கும் இங்குமாக திரிந்து கொண்டிருப்பான். பின்னர், பஞ்சவடியில் இருந்த போதுதான் சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றான். இங்கு சீதை தங்கி இருந்ததாக கூறப்படும் ஒரு குகை 'சீதாதேவி குகை' என்று அழைக்கப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 'கும்பமேளா' நடைபெறும் நாசிக்கில் பிரசித்தி பெற்ற ராமர் கோவிலும், கபாலீஸ்வரர் கோவிலும் உள்ளன.

ராவணன் சீதையை தூக்கிச்சென்ற போது ஜடாயு பறவை அவனை வழிமறித்து சண்டையிடும். அப்போது ராவணன், ஜடாயுவின் இறக்கையை வாளால் வெட்டி வீழ்த்தியதால் அது கீழே விழுந்து மரணம் அடையும். உயிர் பிரிவதற்கு முன் அங்கு வரும் ராமரிடம் நடந்த விவரங்களை ஜடாயு கூறும். அதன் பிறகு ராமர் ஜடாயுவுக்கு இறுதிச்சடங்குகளை செய்து மோட்சம் அளிப்பார்.

தற்போது ஆந்திராவில் உள்ள லெபக்ஷி என்ற ஊர்தான் ஜடாயு வெட்டி வீழ்த்தப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது. அங்கு பழங்கால வீரபத்திரர் கோவில் ஒன்றும் உள்ளது.

கிஷ்கிந்தை நாட்டின் மன்னனும், வாலியின் தம்பியுமான சுக்ரீவனின் வானரப்படை உதவியுடன்தான் ராமர் இலங்கை சென்று சீதையை மீட்டு வந்தார். ராமாயணத்தில் குறிப்பிடப்படும் கிஷ்கிந்தை என்பது கர்நாடகத்தில் ஹம்பி நகருக்கு அருகே துங்கபத்ரா நதியையொட்டியுள்ள பகுதிகள் ஆகும். சிற்ப மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற நகரமான ஹம்பி 'யுனெஸ்கோ' அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பலகோடி ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் எரிமலை இருந்திருக்கலாம் என்றும், அது வெடித்து எரிமலை குழம்பு வெளியேறிய தடயங்களும், மண் அரிப்பும் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ராவணனால் கடத்திச்செல்லப்பட்ட சீதையை ராமரும், லட்சுமணனும் தேடி அலைந்த போது ரிசியமுக் மலை என்ற இடத்தில் அனுமாரை சந்தித்தனர். அங்குதான் ஆஞ்சனேயர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்த இடம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. 4,264 அடி உயரம் கொண்ட இந்த மலை ஆஞ்சனேய மலை என்றும் அழைக்கப்படுகிறது. தனது மிகப்பெரிய பக்தனும், நண்பனுமான அனுமாரை ராமர் சந்தித்த இந்த மலை, தற்போது மலையேற்றத்துக்கு சிறந்த இடமாக விளங்குகிறது.

ராமாயணத்தில் இடம் பெறும் மிகவும் முக்கியமான இடம் ராமேசுவரம். இந்திய நிலப்பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவில் இலங்கைக்கு மிகவும் அருகாமையில் உள்ள இடம் இது. ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் வட மேற்கு பகுதியில் மன்னார் தீவில் அமைந்துள்ள தலைமன்னாருக்கு வெறும் 28 கி.மீ. தூரம்தான். இந்த இரு இடங்களுக்கும் இடையேயான ஆழம் குறைந்த கடல் பகுதி மன்னார் வளைகுடா என அழைக்கப்படுகிறது. சுக்ரீவனின் வானரப்படைகளின் உதவியுடன் ராமர் இங்கு கடலில் பாலம் அமைத்து, இலங்கைக்கு போய் ராவணனை வென்று சீதையை மீட்டு வந்ததாக ராமாயணம் கூறுகிறது. ராமர் கட்டிய பாலம் என்பதால் இது 'ராமர் பாலம்' என அழைக்கப்படுகிறது.

இலங்கையில் போர் முடிந்து ராமேசுவரம் திரும்பிய ராமர், ராவணனை கொன்ற பாவம் நீங்க கடற்கரையில் மணலால் ஆன சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ராமரே ஈஸ்வரனை வணங்கியதால், அந்த ஸ்தலம் ராமேசுவரம் ஆனது. ராமேசுவரம் கோவிலில் உள்ள மூலவர் சிவபெருமான், ராமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். ராமேசுவரம் இந்துக்களின் முக்கிய புனித தலமாக விளங்குகிறது. ராமேசுவரம் கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.

இதே மாவட்டம் கடலாடி வட்டத்தில் கடற்கரையையொட்டி அமைந்துள்ள அழகிய சிறிய கிராமம் 'வாலி நோக்கம்'. இந்த கிராமத்தில் இருந்து சுக்ரீவனின் அண்ணன் வாலி இலங்கையை உற்று நோக்கியதால் இது 'வாலிநோக்கம்' என பெயர் பெற்றது.

இந்த மாவட்டத்தில் உள்ள மற்றொரு ஊரான தேவிபட்டினத்தில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவகிரகங்கள் உள்ளன. இவை கரையில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ளன. இது புனித தலமாக கருதப்படுவதால் ராமேசுவரம் வரும் பக்தர்கள் இங்கும் வருகிறார்கள்.

ஜடாயுவை ராவணன் வெட்டி வீழ்த்திய இடம் எது?


சீதையை ராவணன் கடத்திச்செல்லும் போது வழிமறித்து சண்டையிட்ட ஜடாயுவை அவன் வாளால் வெட்டி வீழ்த்திய இடம் ஆந்திர மாநிலத்தில் உள்ள லெபக்ஷி என்று கூறப்பட்டாலும், இது தொடர்பாக மாறுபட்ட கருத்தும் நிலவுகிறது.

கேரள மாநிலம் கொல்லம் நகரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் ஜடாயுமங்கலம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் 1,200 அடி உயரத்தில் ஜடாயு பாறை என்ற இடம் உள்ளது. சீதையை மீட்பதற்காக தன்னை எதிர்த்து சண்டையிட்ட ஜடாயுவின் ஒரு பக்கத்து இறக்கையை ராவணன் வெட்டி வீழ்த்தியதும், ஜடாயு தொடர்ந்து பறக்க முடியாமல் கீழே ஒரு பெரிய பாறையில் விழுந்ததாகவும், அந்த இடம்தான் ஜடாயு பாறை என அழைக்கப்படுவதாகவும் மற்றொரு கருத்தும் உள்ளது. சீதையை தேடி அங்கு வரும் ராமரிடம், இலங்கை வேந்தன் சீதையை தென் திசை நோக்கி கடத்திச் சென்றதாக ஜடாயு கூறியதாக செவிவழி கதைகள் சொல்லப் படுகின்றன.

ஜடாயு விழுந்து இறந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், பரந்து விரிந்த அந்த பாறையில் 200 அடி நீளம், 150 அடி அகலம், 70 அடி உயரத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான ஜடாயு சிற்பம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் மிகப்பெரிய பறவை சிற்பம் ஆகும். 'ஜடாயு இயற்கை பூங்கா' என்ற பெயரில் இது முக்கிய சுற்றுலாதலமாக விளங்குகிறது. இதை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி திறந்து வைத்தார். பாறையின் உச்சிக்கு சென்று ஜடாயு சிற்பத்தை கண்டு களிக்க 'ரோப் கார்' வசதி உள்ளது.

ஜடாயு பாறையில், சற்று குழிவான ஓர் இடம் ராமரின் பாதம் என அடையாளம் காட்டப்பட்டு இருக்கிறது.

வானரப்படை அணிவகுத்த குரங்கணி



தமிழ்நாட்டில் ராமேசுவரம் தவிர வேறு சில பகுதிகளும் ராமாயண கதை நடந்த இடங்களாக கருதப்படுகின்றன. இது தொடர்பான செவிவழி கதைகளும் உள்ளன.

* தென்காசி மாவட்டத்தில் தென்காசி-நெல்லை சாலையில் அமைந்துள்ள ஆலங்குளத்தில் இருந்து வடக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது மாயமான்குறிச்சி என்ற ஊர். வஞ்சகமாக மான் வேடம் தரித்து பர்ணசாலை அருகே வந்த மாரீசனை உண்மையான மான் என நம்பி அதை தனக்கு பிடித்துத் தருமாறு சீதை வற்புறுத்தி கேட்டதால், ராமர் அதை பிடிப்பதற்காக துரத்திச் செல்வார். ஆனால் மான் ராமருக்கு பிடி கொடுக்காமல் போக்கு காட்டியபடி ஓடும். ஒரு கட்டத்தில் ராமர், இது சாதாரண மான் அல்ல; மாயமான் என்று புரிந்து கொள்வார். அப்படி அவர் மாயமானை அடையாளம் கண்ட இடம்தான் 'மாயமான்குறிச்சி' என அழைக்கப்படுகிறது.

* விரட்டிச் செல்லும் மானை ஓர் இடத்தில் குத்தி வீழ்த்த ராமபிரான் முயற்சிப்பார். அந்த இடம் 'குத்தப்பாஞ்சான்' (குத்துவதற்கு பாய்ந்தான்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஊர் ஆலங்குளத்துக்கு தெற்கே சற்று தொலைவில் உள்ளது.

* கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவி சீதையை தேடி வனத்தில் அலைந்து திரியும் ராமபிரான் கடனா நதியோரம் ஒரு புளியமரத்தின் அடியில் தங்கி இளைப்பாறுவார். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பாப்பாங்குளம்தான் அந்த இடம். ராமர் தங்கிய அந்த இடத்தில் அவரது பாதம் பட்ட பாறை ஒன்றும், புளியமரம் ஒன்றும் உள்ளது. அந்த இடத்தில் இப்போது பெரிய ராமர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமிக்கு முதல் நாள் இந்த கோவிலில் விமரிசையாக தேரோட்டம் நடைபெறுகிறது.

முதலில் அங்கு சிறிய கோவில் ஒன்று இருந்ததாகவும், பின்னர் பாண்டிய மன்னன் ஆதித்யவர்மனால் பிரகாரத்துடன் கூடிய பெரிய கோவில் கட்டப்பட்டதாகவும் அந்த ஊரைச் சேர்ந்த டாக்டர் ராமசாமி தெரிவித்தார். கடனா நதியில் ராமபிரான் நீராடி அங்குள்ள ஒரு பாறையில் அமர்ந்து 'சந்தியாவந்தனம்' செய்ததாகவும், விஷ்ணுவின் சக்கராயுதத்தை குறிக்கும் வகையில் அந்த பாறை 'சக்கர பாறை' என அழைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். அந்த பாறை தற்போதும் அங்கு உள்ளது. கிராம மக்கள் அங்கு வந்து குளித்துச் செல்கிறார்கள்.

* தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது குரங்கணி என்ற ஊர். இங்குள்ள முத்துமாலை அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆகும்.

பறக்கும் தேர் எனப்படும் புஷ்பக விமானத்தில் ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான், அப்படி செல்லும் போது, தனது கணவர் ராமபிரான் தான் சென்ற திசையை அறிந்து கொள்ள உதவும் வகையில் சீதை, தான் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை கழற்றி வீசினார். முத்துமாலை விழுந்த இடத்தில் அம்மன் கோவில் ஒன்று உருவானது. அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் அம்மன் முத்துமாலை அம்மன் என அழைக்கப்படுகிறார். இது தொடர்பான ஸ்தல புராண கதையும் உள்ளது.

* பின்னர் சீதையை தேடி அங்கு வரும் ராமரும், லட்சுமணனும் சுக்ரீடனின் வானரப்படையுடன் இலங்கை செல்ல தயாராவார்கள். இதற்காக அங்கு வானரப்படைகள் அணிவகுத்து நின்றதால், அந்த இடம் 'குரங்கணி' என அழைக்கப்படுகிறது.

* கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 'முன்சிறை' என்ற இடம் உள்ளது. சீதையை கவர்ந்து சென்ற ராவணன், வழியில் ஓர் இடத்தில் பாறையில் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி, அங்கு சீதையை தனிமைப்படுத்தி வைத்து சிறிது நேரம் ஓய்வெடுத்தான். இலங்கையில் சிறை வைக்கப்படும் முன்பே வழியில் சிறிது நேரம் சீதை சிறைவைக்கப்பட்ட அந்த இடம் 'முன்சிறை' என அழைக்கப்படுகிறது. அந்த பாறையில் இரு கண்கள் வடிவத்தில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை சீதாதேவி சிந்திய கண்ணீர் என்று சொல்கிறார்கள்.

* நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் பொத்தையடி என்ற கிராமத்தின் அருகே 'மருந்துவாழ் மலை' என்ற ஒரு மலை உள்ளது. ராவணன் படையுடன் நடந்த போரின்போது மயக்கமுற்ற லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்க மூலிகை கொண்டு வருமாறு ராமர் கூற, அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து கொண்டு செல்வார். அப்படி அவர் கொண்டு செல்லும் போது சிதறி விழுந்த ஒரு துண்டுதான் இந்த 'மருந்துவாழ் மலை' என்று சொல்லப்படுகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த மலை அனுமார் போன்று காட்சி அளிக்கும்.

* இதேபோல் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கொழுந்து மாமலையும் சஞ்சீவி மலையின் சிதறிய பகுதி என சொல்லப் படுகிறது. சேரன்மகாதேவியில் பிரசித்திபெற்ற ராமர் கோவில் ஒன்றும் உள்ளது.

சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே?


இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய சில முக்கிய இடங்களை பார்ப்போம்...

* இலங்கைக்கு சீதையை கடத்திச் சென்ற ராவணன் அங்கு அவரை தனது மாளிகையில் தங்க வைக்க விரும்பினான். ஆனால் சீதாதேவி அதை ஏற்க மறுத்துவிட்டதால் அசோக வனத்தில் சிறை வைத்தான். அந்த இடம் நுவரெலியா நகரின் அருகே உள்ளது. அங்குள்ள ஹக்கலா தாவரவியல் பூங்காதான் சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் ஆகும். இங்கு சீதைக்கு கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. அங்குள்ள பாறையில் காணப்படும் பள்ளம் அனுமனின் கால்தடம் என அடையாளம் காட்டப்பட்டு உள்ளது.

* ராவணன் முதலில் தனது மனைவி மண்டோதரியின் மாளிகையில்தான் சீதையை வைத்திருப்பான். மாளிகை வாசத்தை சீதாதேவி விரும்பாததால், அதன்பிறகு அவளை அசோக வனத்துக்கு கொண்டு சென்று சிறை வைப்பான். சீதை முதலில் தங்க வைக்கப்பட்ட மண்டோதரி மாளிகை தற்போது 'சீதா கொடுவா' என்று அழைக்கப்படுகிறது.

* இலங்கையின் மத்திய மாகாணத்தில் ராம்போதா என்ற இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் உள்ளது. இங்கு 'சீதா கண்ணீர் குளம்' என்ற சிறிய குளம் ஒன்று உள்ளது. ராமனை பிரிந்த சீதாதேவி சிந்திய கண்ணீரால் இந்த குளம் உருவானதாக கூறப்படுகிறது. இந்த ஊரில் 109 மீட்டர் உயர நீர்வீழ்ச்சி ஒன்றும், பக்த அனுமார் கோவில் ஒன்றும் உள்ளது.

* சீதையை தேடி இலங்கை செல்லும் அனுமனின் வாலுக்கு தீ வைத்து விடுவார்கள். வாலில் பற்றிய தீயின் மூலம் நகரை அழித்துவிடுவான் அனுமன். இதில் ராவணன் தனது புஷ்பக விமானங்களை வைத்திருந்த இடமும் எரிந்து நாசமாகிவிடும். அந்த இடம் தற்போது உசன்கோடா என்று அழைக்கப்படுகிறது.

* வானரப்படை அமைத்த கடல் பாலம் வழியாக ராமர் இலங்கைக்கு போய்ச் சேர்ந்த இடம் தலைமன்னார். இங்குதான் ராமரின் படைகளுக்கும், ராவணனின் படைகளுக்கு சண்டை நடந்ததாக கருதப்படுகிறது.

* ராமரின் கட்டளையை ஏற்று மூலிகை கொண்டு வருவதற்காக செல்லும் அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்துக் கொண்டு இலங்கைக்கு செல்வான். அப்படி அவன் கொண்டு செல்லும் சஞ்சீவி மலை இலங்கையில் 5 துண்டுகளாக சிதறி விழும். இலங்கையில் உள்ள தொலுகொண்டா சஞ்சீவி மலைத்தொடர், அந்த 5 துண்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

* யாழ்ப்பாணம் பகுதியில் நிலவரை என்ற ஒரு சிறிய கிணறு உள்ளது. ராவணனுடனான போரின் போது வானரப்படையினருக்கு குடிக்க தண்ணீர் வழங்குவதற்காக ராமர், பூமியில் அம்பு எய்தார். இதனால் அந்த இடத்தில் ஊற்று பெருக்கெடுத்தது. ராமர் அம்பு எய்ததால் ஊற்று பெருக்கெடுத்த இடம்தான் அந்த கிணறு என்றும், அதன் ஆழத்தை கண்டறிய இயலவில்லை என்றும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

* போரில் ராவணன் கொல்லப்பட்ட பிறகு, அவன் தம்பி விபீஷணனிடம் இலங்கை ராஜ்ஜியத்தை ராமர் ஒப்படைத்து அவனுக்கு முடி சூட்டுவார். கொழும்பு நகரில் விபீஷணன் முடிசூட்டிக்கொண்ட இடத்தில் தற்போது கேளனியா என்ற கோவில் உள்ளது.

* இலங்கேசுவரனின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சீதை தீக்குளித்து, தான் கற்பு நெறி தவறாதவள் என்பதை நிரூபிப்பார். அந்த இடம் தற்போது திருவம்போலா என அழைக்கப்படுகிறது.

* தலைமன்னாரில் உள்ள கேத்தீஸ்வரன் கோவில் ராவணனின் தந்தை மாயனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு ஏற்கனவே இரு சிவலிங்கங்கள் உள்ள நிலையில், சிவபெருமானின் கட்டளையை ஏற்று ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமர் மூன்றாவது சிவலிங்கம் ஒன்றை நிறுவி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்