புதுமையை கொண்டாடுவோம்..! இன்று தேசிய பொறியாளர்கள் தினம்

இந்தியாவைப் போன்று இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளிலும் செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.;

Update:2023-09-15 06:00 IST

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. எந்த தொழிலாக இருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு பொறியாளர் இருக்கிறார். அத்தகைய பொறியாளர்களை கவுரவிக்கும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி தேசிய பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கொண்டாட்டமானது, நிலையான எதிர்காலத்திற்கான பொறியியல் என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. எனவே, புதுமை மற்றும் நிலைத்தன்மையை இந்த நாளில் கொண்டாடுவோம்.

இந்தியாவின் முதல் சிவில் என்ஜினீயரான டாக்டர் மோஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவைப் போன்று இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளிலும், விஸ்வேஸ்வரய்யாவின் பொறியியல் பங்களிப்பை போற்றும் வகையில் செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தலைசிறந்த பொறியாளரான டாக்டர் மோஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா கர்நாடகாவின் சிக்கபல்லாபுரா மாவட்டம் முத்தனஹள்ளி என்ற சிறிய கிராமத்தில், செப்டம்பர் 15, 1861-ல் பிறந்தார். பொறியியல் துறையில் அவர் செய்த பல்வேறு பங்களிப்புகள் மற்றும் கல்வியின் முன்னோடியாக இருந்ததால், அவர் "சர் விஎம்" என்றும் அழைக்கப்படுகிறார்.

அவரது பெற்றோர் சமஸ்கிருத அறிஞர்கள் ஆவர். விஸ்வேஸ்வரய்யா தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற பின்னர், உயர் கல்விக்காக பெங்களூரு சென்று, கலைகளில் இளங்கலை படித்தார். அதன்பின்பு புனே பொறியியல் கல்லூரியில், சிவில் என்ஜினியரிங் பட்டம் பெற்றார்.

அவரது நிபுணத்துவம் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ள பேரழிவு மேலாண்மை ஆகிய துறைகளில் இருந்தது. நவீன நீர்ப்பாசன நுட்பங்கள் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் தணிப்பு துறைகளில் அவர் உருவாக்கிய படைப்புகள் அவருக்கு புகழ் சேர்த்தன. 1903ம் ஆண்டில் புனேவில் கடக்வஸ்லா நீர்த்தேக்கத்தில் நிறுவப்பட்ட 'தானியங்கி தடை நீர் வெள்ள வாயில்களை' அவர் வடிவமைத்தார்.

பின்னர் அவர் இந்தியாவின் மிகப்பெரிய அணையான 'கிருஷ்ண ராஜ சாகர்' அணையின் கட்டிடக் கலைஞராக பணியாற்றினார். 1917ம் ஆண்டு பெங்களூருவில் புகழ்பெற்ற அரசு பொறியியல் கல்லூரியை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார். தற்போது அந்த பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. அவர் ஒரு பொறியியலாளராக மட்டுமின்றி சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்தார். 1955ம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்