அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேறிய தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் - அன்று நடந்தது என்ன?

சென்னை மாநிலம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றக்கோரும் தீர்மானம், 1967-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியபோது உறுப்பினர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் "தமிழ்நாடு வாழ்க" என்று 3 முறை முழக்கம் எழுப்பினர்.;

Update:2024-07-18 15:18 IST

சென்னை:

நாட்டின் விடுதலைக்கு பிந்தைய மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பேசுபவர்கள் பரவலாக இருந்தார்கள். அதன் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளை கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன. மெட்ராஸ் மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு மெட்ராஸ் ஸ்டேட் என பெயர் வைக்கப்பட்டது. அதன்பின்னர் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியது.

இந்த கோரிக்கைக்காக காங்கிரசைச் சேர்ந்த சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அதன்பின் தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை தீவிரமடைந்தது. தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா அடுத்தடுத்து தோல்வி அடைந்த நிலையில், பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபிறகு 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது சட்டசபை வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. அதன் பிறகு மத்திய அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டது.

 

தமிழ்நாடு நாள் என்ற பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் நான்காவது ஆண்டாக இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பான சட்டசபையில் தீர்மானம் நிறைவேறிய உணர்ச்சிகரமான தருணம் தொடர்பாக, 19-7-1967 அன்று தினத்தந்தி வெளியிட்ட செய்தி வருமாறு:

"சென்னை மாநிலம்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றக்கோரும் தீர்மானம், நேற்று தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியது. தீர்மானம் நிறைவேறியதும் எல்லா உறுப்பினர்களும் "தமிழ்நாடு வாழ்க" என்று 3 முறை முழக்கம் செய்தார்கள். தமிழ்நாடு சட்டசபையில், உறுப்பினர்கள் இவ்வாறு உணர்ச்சிப்பெருக்குடன் முழக்கம் செய்தது, இதுவரை காணாத காட்சியாகும்.

தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் நேற்று முடிந்தது. கூட்டம் முடிவடைவதற்கு முன்னால், தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

தீர்மானத்தை முதல்-அமைச்சர் அண்ணாதுரை கொண்டு வந்தார். தமிழ்நாடு என்று பெயர் வைக்க அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்கள், உணர்ச்சிவசப்பட்டு, நாத்தழுதழுக்க பேசினார்கள். பெயர் மாற்றம் செய்ய, கட்சி மாறுபாடு இல்லாமல் எல்லோரும் ஆதரவு தெரிவித்தார்கள்.

விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் அண்ணாதுரை பேசியதாவது:-

இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும் எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்டநாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம் காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது. இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, "தமிழ்நாடு என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்தியப் பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர் மிகவும் கவனத்துடனும் சிரமத்துடனும் "டமில்நாட்" (தமிழ்நாடு) என்று பேசினார்.

ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்புக் கிடைத்து இருக்கிறது. இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால், அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல; தமிழின் வெற்றி, தமிழரின் வெற்றி, தமிழர் வரலாற்றின் வெற்றி, தமிழ்நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்.

மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனிநாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது.

சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப்பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அண்ணாதுரை கூறினார்.

பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

பின் அண்ணாதுரை எழுந்து "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நன்னாளில், தமிழ் நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ்நாடு" என்று 3 முறை குரல் எழுப்பினார். எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள். சபை முழுவதிலும் உணர்ச்சி மயமாக காட்சி அளித்தது.

பிறகு பேரவைத் தலைவர் ஆதித்தனார், "இதுவரை இந்த சபையை அமைதியுடனும் கண்ணியத்துடனும் நடத்த துணைபுரிந்த உறுப்பினர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

பிறகு, சபை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

தினத்தந்தி வெளியிட்ட தலையங்கம்

"சென்னை மாகாணம்" என்ற பெயரை, "தமிழ்நாடு" என்று மாற்றவேண்டும் என்பது, தமிழ்மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

இவ்வளவு காலமாக நிறைவேறாமல் இருந்த இந்த கோரிக்கையை, தமிழகத்தின் புதிய அரசு நிறைவேற்றுகிறது. தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை, தமிழக அரசாங்கமே சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளது.

பழைய சென்னை மாகாணத்தில், ஆந்திரமும், கேரளமும் சேர்ந்திருந்தன. அவை பிரிந்து சென்ற உடனேயே, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி இருக்க வேண்டும். ஆனால் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஏதேதோ நொண்டிக் காரணங்களை கூறி, தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார்கள்.

சென்னை மாநிலம் என்ற பெயரைவிட, பம்பாய் மாநிலம் என்ற பெயர் உலகப் புகழ் பெற்றது. அப்படி இருந்தும், மொழி உணர்ச்சியுள்ள மகாராஷ்டிரர்கள், பம்பாய் மாநிலம் என்ற பெயரை தூக்கி எறிந்துவிட்டு, "மகாராஷ்டிரம்" என்ற பெயரை சூட்டினார்கள். இதேபோல, வங்காளம், கேரளம், ஆந்திரம், குஜராத், பஞ்சாப் என்று எல்லோரும் மொழி அடிப்படையில் தங்கள் மாநிலங்களுக்கு பெயர் சூட்டிக்கொள்ள, தமிழன் மட்டும் உலகத்தின் கண்ணில் "மதராசி"யாக தலை குனிந்து நின்றான்!

அந்த அவல நிலைமை, இனி ஒழியும். உலகம் முழுவதிலும் இனி தமிழ்நாடு என்ற பெயர் ஒலிக்கும். தமிழனை பிறமொழிக்காரர்கள் "மதராசி" என்று அழைக்க மாட்டார்கள். "தமிழன்" என்றே அழைப்பார்கள். தமிழன் பெருமை உலகம் முழுவதும் பரவ, தமிழ்நாடு பெயர் மாற்றம் உதவும்.

Tags:    

மேலும் செய்திகள்