வந்தாரை வாழ வைக்கும் நகரம்..! சென்னைக்கு இன்று 385-வது பிறந்த நாள்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.;

Update:2024-08-22 11:29 IST

தமிழகத்தின் தலைநகராக பரந்து விரிந்து காணப்படும் சென்னை நகருக்கு இன்று 385-வது பிறந்த நாள். அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகின்றன.

இந்தியாவில் வணிகம் செய்ய ஆங்கிலேயர்கள் 1600-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினர். அவர்கள் மசூலிப்பட்டினத்தில் முதலில் கம்பெனியை தொடங்கி வணிகம் செய்தனர். ஆங்கிலேயர்கள் போலவே டச்சுக்காரர்கள், ஸ்பெயின், போர்த்துகீசியர்கள் ஆகியோரும் இந்தியாவில் வணிகம் செய்தனர். அவர்களுக்குள் போட்டிகள் அதிகரிக்கவே ஆங்கிலேயர்கள் புதிய கம்பெனி அமைப்பதற்கு தென் பகுதியில் ஒரு இடத்தை தேடினர். இதற்காக ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ் டே ஆகிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அந்த காலத்தில், மதராசப் பட்டினத்தில் இருந்த கிராமங்கள் அனைத்தும் வெங்கடப்பா நாயக்கர், அய்யப்பா நாயக்கர் என்ற இரு சகோதரர்கள் ஆளுமையின் கீழ் இருந்தது. வந்தவாசியை தலைமையிடமாகக் கொண்டு வெங்கடப்பா நாயக்கரும், பூந்தமல்லியை தலைமையிடமாகக் கொண்டு அய்யப்பா நாயக்கரும் ஆட்சி செய்தனர். இருவரையும் சந்தித்த பிரான்சிஸ் டே, தங்களின் கிழக்கு இந்திய கம்பெனியை தொடங்க சிறிய இடம் ஒன்று வேண்டும் என்று கேட்டார். அதன்படி, வங்கக் கடலை ஒட்டி 5 மைல் நீளத்துக்கும், ஒரு மைல் அகலத்துக்குமான இடத்தை ஆங்கிலேயர்களுக்கு சகோதரர்கள் இருவரும் எழுதிக் கொடுத்தனர்.

அதுவும், தங்களின் தந்தையின் பெயரான சென்னப்ப நாயக்கர் பெயரில் அந்த இடத்தை அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மதராசப் பட்டினம் சென்னப் பட்டினமாக பெயர் மாறியது. இந்த நிகழ்வு 384 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி நடந்தது. சென்னை உருவாக இந்த நாள் ஒரு காரணமாக அமைந்ததால், ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ம் தேதி சென்னையின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

ஜார்ஜ் கோட்டை

1639-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வாங்கிய அந்த நிலத்தில் 1640-ம் ஆண்டு ஒரு பெரிய கோட்டையை கட்ட தொடங்கினர். அப்போது முதல் அந்த பகுதி நகரமாக வளர்ச்சி அடைய தொடங்கியது. இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது. கோட்டைக்கான கட்டுமான பணிகள் 1653-ம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆங்கிலேயர்களுக்கு பணி செய்ய வந்தவர்கள், கோட்டை பணியில் ஈடுபட்டவர்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி மக்கள் குடிபெயர தொடங்கினர்.

கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் மிக பழமையான கிராமங்கள் ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான குடியிருப்புகளில் ஆங்கிலேயர்கள் வசித்தனர். அந்த பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்பட்டது. அதே போன்று கோட்டையை சுற்றி இந்தியர்கள் வாழ்ந்த நகரம் கருப்பு நகரம் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக கோட்டை அமைந்த பகுதி ஜார்ஜ் நகரம் என்றே குறிப்பிடப்பட்டது.

மதராசப்பட்டினமா, சென்னப்பட்டினமா..?

இதற்கிடையே கோட்டை மற்றும் ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்திய பகுதி அனைத்தும் அப்பகுதி உள்ளூர் மக்களால் மதராசப்பட்டினம் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் கோட்டை கட்ட நிலம் வழங்கிய மன்னர்களின் தந்தை பெயரான சென்னப்ப நாயக் பெயரை வைத்து சென்னப்பட்டினம் என்ற பெயரை ஆங்கிலேயர்கள் சூட்டினர். இதனால் புதிதாக விரிவடைந்த நகரத்திற்கு பெயர் மதராசப்பட்டினமா அல்லது சென்னப்பட்டினமா என்ற சந்தேகம் இருந்தது. கோட்டை மற்றும் சுற்றிள்ள பகுதிகள் இணைந்து நகரமாக உருவான நிலையில், வடக்கு பகுதி மதராசப்பட்டினம் என்றும், தெற்கு பகுதி சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. நாளடைவில் இந்த நகரம் முழுவதுமே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர், பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்த சாந்தோம், நெசவாளிகள் வாழ்ந்த சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சிறிய கிராமங்களை படிப்படியாக மெட்ராஸ் நகரத்துடன் இணைத்து ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்தினர். திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களும் மெட்ராஸ் நகரத்துடன் இணைந்தது. 1688-ம் ஆண்டு மெட்ராஸ் பகுதிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது.

மெட்ராஸ் மாகாணம்

அதன்பிறகு பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்பு பகுதிகளை இணைத்து "மெட்ராஸ் மாகாணம்" உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் மிகப்பெரிய இடத்தை பெற்றது. மெட்ராஸ் மாகாணத்தை மற்ற நகரங்களுடன் இணைக்க ரெயில் பாதைகள் உருவாக்கப்பட்டன. மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. காவல்துறையும் ஏற்படுத்தப்பட்டு, நீதிமன்றமும் கட்டப்பட்டது. ஐகோர்ட்டு, சென்னை பல்கலைக்கழகம், மாநில கல்லூரி, சென்ட்ரல் ரெயில் நிலையம் ஆகியவை அப்போதுதான் உருவாக்கப்பட்டன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது. அதன் பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969-ம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ் 1996-ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றப்பட்டது.

வளர்ச்சி

அதன் பிறகு சென்னை நகரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய தொடங்கியது. சென்னை நகரின் பரப்பளவு பரந்து விரியத் தொடங்கியது. சென்னையை சுற்றிலும் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை வேகமான வளர்ச்சியை பெற்றன. அதன் காரணமாக சென்னை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி என்ற அந்தஸ்தோடு திகழ்கிறது. இதனால் பல்வேறு துறைகளிலும் சென்னை நகரம் முதலிடம் பெற்று சிறப்புடன் திகழ்கிறது.

சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரின் பிறந்த நாளை அனைவருமே கொண்டாடி மகிழ்வோம்.

Tags:    

மேலும் செய்திகள்