நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 ... 2023-ம் ஆண்டின் இஸ்ரோ சாதனைகள் - ஒரு பார்வை...!
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.;
ஸ்ரீஹரிகோட்டா,
இஸ்ரோ:-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆண்டுதோறும் பல்வேறு சாதனைகள் புரிந்து உலகின் முன்னோடி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
அந்தவகையில் 2023ம் ஆண்டு இஸ்ரோ செய்த சாதனைகள் குறித்த விவரத்தை காண்போம்.
சந்திரயான் - 3
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் சந்திரயான் - 3 திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து சந்திரயான் - 3 விண்கலம் ஏவப்பட்டது.
புவிவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த சந்திரயான் - 3 விண்கலம் ஆகஸ்ட் 5ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.
நிலவில் தரையிறங்கிய சந்திரயான் - 3
சந்திரயான் - 3 விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர்:
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. ஆகஸ்ட் 24ம் தேதி விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்தது.
நிலவின் தென்துருவத்தில் ஆய்வுப்பணிகள்:
விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரையும், நிலவின் மேற்பரப்பையும் பிரக்யான் ரோவரில் இருந்த கேமரா புகைப்படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், நிலவின் தென் துருவத்தில் சல்பர் உள்பட பல்வேறு தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்து முடிவுகளை பூமிக்கு அனுப்பியது.
சிவசக்தி பகுதி:
நிலவில் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கிய பகுதிக்கு 'சிவசக்தி' பகுதி என்று பெயரிடப்பட்டுள்ளது.
உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்:
நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 4ம் தேதி உறக்க நிலைக்கு சென்றது.
விக்ரம் லேண்டரை மீண்டும் தொடர்புகொள்ள முயற்சி:
உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.
ஆதித்யா எல்-1
சூரியனை ஆய்வு செய்வதற்கு கடந்த செப்டம்பர் 2ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
லாக்ராஞ்சியன் புள்ளி-1
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே லாக்ராஞ்சியன் புள்ளி-1 என்ற பகுதி உள்ளது. பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இந்த பகுதி உள்ளது.
ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை 125 நாட்கள் பயணம் செய்து லாக்ராஞ்சியன் புள்ளி-1 பகுதிக்கு சென்றடைய உள்ளது. அங்கிருந்து சூரியனின் செயல்பாடுகளை ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வு செய்கிறது.
ஜிஎஸ்எல்வி மார்க்-3
இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியது. மார்ச் 26ம் தேதி 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. வணிக நோக்கத்துடன் இந்த ராக்கெட் ஏவப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் 450 கிலோமீட்டர் தொலைவில் 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் சோதனை வெற்றி:
தகவல் தொடர்பு, காலநிலை தகவல்கள், விண்வெளி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. ஒவ்வொரு முறையும் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப புதிய ராக்கெட்டுகள் வடிவமைக்கப்படுகின்றன. செயற்கைக்கோள்களை சுமந்து சென்று விண்ணுக்கு அனுப்பி விட்டு ராக்கெட் பாகங்கள் கடலில் விழுந்துவிடும். அந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்த முடியாது.
இந்நிலையில், செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த ஏப்ரல் 2ம் தேதி மறுபயன்பாட்டு ராக்கெட் பரிசோதனையை இஸ்ரோ மேற்கொண்டது. இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டரில் ராக்கெட் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. நடுவானில் 4.5 கிலோமீட்டர் உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து ராக்கெட் வாகனம் தனியாக அனுப்பப்பட்டது.
அதன்பின்னர், ராக்கெட் தன்னிச்சையாக செயல்படத்தொடங்கியது. ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டிருந்த ஒருங்கிணைந்த நேவிகேசன் வழிகாட்டி கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராக்கெட் வாகனம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த சோதனை வெற்றிபெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ககன்யான் திட்டம்:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கனவு திட்டமாக ககன்யான் திட்டம் உள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்துவருகிறது.
அதன்படி, கடந்த அக்டோபர் 22ம் தேதி ககன்யான் விண்கலம் போன்ற மாதிரி விண்கலத்தை சிறிய வகை ராக்கெட் மூலம் இஸ்ரோ ஏவியது. பூமியில் 17 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ககன்யான் மாதிரி விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவுக்குள் பாரசூட்டுகள் மூலம் வங்கக்கடலில் வெற்றிகரமாக விழுந்தது. அந்த மாதிரி விண்கலத்தை மீட்ட கடற்படையினர் விண்கலத்தை இஸ்ரோவிடம் ஒப்படைந்தனர். ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றிபெற்ற நிலையில திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருகிறது.
நடப்பு ஆண்டில் இஸ்ரோ பல்வேறு சாதனைகள் படைத்துள்ள நிலையில் வரும் 2024ம் ஆண்டும் இஸ்ரோவின் சாதனை பயணம் தொடரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.