இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள்
ஈரான் அணு ஆயுத நாடாக மாறுவதற்காக தனது அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.;
இஸ்ரேலும் ஈரானும் பல ஆண்டுகளாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இரு தரப்பில் இருந்தும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தப்பட்டபோதும், அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளாமல் இருந்தனர். இப்போது காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரைத் தொடர்ந்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் தேதி தாக்கப்பட்டது. இதில் தூதரகத்தில் இருந்த ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர், சிரியாவைச் சேர்ந்த 4 பேர், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. எனினும், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது.
தூதரக தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்ததுடன், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. ஈரான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட இந்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் 2 விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதன்மூலம் இஸ்ரேல் மீது ஈரான் முதல் முறையாக நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் இரு நாடுகளிடையே நேரடி போர் மூளும் அபாயம் உள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேல் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இஸ்ரேலிடம் சொந்தமாக அணு ஆயுதங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை.
ஈரானிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் அணு ஆயுத நாடாக மாறுவதற்காக தனது அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஈரான் கூறி உள்ளது. இருந்தாலும், அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதால் அவை அணுகுண்டுகளுக்கான எரிபொருளாக மாற்றப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு ஈரானில் சோதனை நடத்தியபோது, நிலத்தடி போர்டோ தளத்தில் யுரேனியம் துகள்கள் 83.7 சதவீதம் செறிவூட்டப்பட்டதை கண்டறிந்தது. இது அணு ஆயுதம் தயாரிப்புக்கு கிட்டத்தட்ட ஏற்ற வகையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், செறிவூட்டும்போது எதிர்பாராமல் நிகழ்ந்த ஏற்ற இறக்கமாக இருக்கலம் என ஈரான் விளக்கம் அளித்தது.
உலக வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி ஈரான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டி வருகிறது.
2018-ல் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதுடன், ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதனால் அந்த ஒப்பந்தம் சீர்குலையத் தொடங்கியது. அந்த அணுசக்தி ஒப்பந்தத்தை இஸ்ரேல் முதலில் எதிர்த்தது. அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் நிர்வாகம் வெளியேறியதில் இருந்து ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கணிசமாக மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது.