வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல.. நடவடிக்கைக்கான அழைப்பு: இன்று சர்வதேச இளைஞர் தினம்
டிஜிட்டல் மயமாக்கல், நமது உலகத்தை மறுவடிவமைப்பு செய்து. நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு ஈடு இணையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது.;
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் திறன், சாதனைகள் மற்றும் சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ம் தேதி சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள், இளைஞர்களின் கொண்டாட்ட தினமாக மட்டுமல்லாமல், இளைய சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்கான அழைப்பு விடுக்கும் நாளாகவும் அமைந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் சர்வதேச இளைஞர் தினம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இளைஞர்களின் பிரச்சினைகளை உலக அளவில் முன்னிலைப்படுத்த உதவுகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கவும் ஊக்குவித்துள்ளது. மேலும், இளைஞர்களுக்கு அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க இந்த நாள் அதிகாரம் அளித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் கருப்பொருள், 'கிளிக்ஸில் இருந்து முன்னேற்றம் வரை: நிலையான வளர்ச்சிக்கான இளைஞர்களின் டிஜிட்டல் பாதைகள்' ஆகும்.
உலகளவில் புதுப்புது டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை இயக்கி, புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும், அதனை மேம்படுத்துவதிலும் இளைஞர்கள் முன்னணியில் உள்ளனர்.
டிஜிட்டல் மயமாக்கல் உலகில் பல மாற்றங்களை கொண்டு வந்து உலகத்தை மறுவடிமைப்பு செய்கிறது. நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு ஈடு இணையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. மொபைல் சேவைகள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை நோக்கி முன்னேறுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. டிஜிட்டல் தொடர்புகளிலிருந்து உருவாக்கப்படும் தரவுகள் மூலம், ஆதாரப்பூர்வமான முடிவுகளை எடுக்க முடிகிறது.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi