இன்று சர்வதேச மகளிர் தினம் - பெண்மையை போற்றுவோம்
அனைத்து நாடுகளிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டாலும், முதன்முதலாக கொண்டாடப்பட்டது அமெரிக்காவில்தான்.;
ஆணின் வாழ்வில் தாய், மனைவி, மகள், சகோதரி என பல உறவுகளில் வலம் வருபவள் பெண். பெண்கள் வீட்டின் கண்கள் மட்டும் இல்லை. நாட்டின் கண்களும் அவர்கள்தான்.
உறவுகளின் படைப்பாளியாக, சமுதாயத்தில் சரி பாதியாக இருந்தாலும் ஆணுக்கு நிகரான உரிமைகளை பெறுவதில் பெண்ணுக்கு ஏனோ ஓர வஞ்சனை காட்டியது சமுதாயம். வீடே கதி என்று முடக்கப்பட்டு கிடந்த அவர்கள் வீறு கொண்டு எழுந்து போராடிய பிறகே உரிமைகள் தேடி வர ஆரம்பித்தன. கல்வி அறிவு காரணமாக இன்று ஆணுக்கு நிகராக பெண்கள் படுவேகமாக முன்னேறி வருகின்றனர். அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் என பல்துறைகளிலும் முத்திரை பதிக்கும், அந்த முத்துக்களின் சாதனையை கொண்டாடும் வகையில் உதித்ததுதான் சர்வதேச மகளிர் தினம்.
இன்று கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் இந்நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டாலும், முதன்முதலாக கொண்டாடப்பட்டது அமெரிக்காவில்தான்.
1857, மார்ச் 8ந்தேதி அன்று நியூயார்க்கில் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை பார்த்த பெண்கள் குறைந்த கூலியை கண்டித்தும், வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மோசமான சூழ்நிலையை எதிர்த்தும் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸ் அடித்து நொறுக்கி விரட்டி அடித்தது. அடிபட்ட அவர்கள் அடுத்த 2 ஆண்டில் இதே மாதத்தில் பெண்களுக்கான முதல் தொழிற்சங்கத்தை நிறுவினர். பிறகு அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் இதே நாளில் வேலை நேரத்தை குறைக்க கோரியும், நல்ல சம்பளம் மற்றும் ஓட்டுரிமை கேட்டும் பெண்கள் பேரணிகள் நடந்தன. அப்போது 1909-ம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
20-ம் நூற்றாண்டில்தான் உலகம் தொழில்மயமாக தொடங்கியது. பொருளாதார விரிவாக்கமும் அசுர வேகத்தில் இருந்தது. அப்போதுதான் பெண்களுக்கு என்று ஒரு சர்வதேச தினம் வேண்டும் என்ற யோசனை தோன்றியது. 1910-ல் கோபன்ஹேகனில் பெண்களின் முதல் சர்வதேச மாநாடு நடந்தது. அதில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா செட்கின் என்பவர் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கான கருத்துருவை தாக்கல் செய்தார். அது ஏகமனதாக நிறைவேறியது. அதுமுதல் மார்ச் 8 என்றால் மகளிர் தினம் என்று நிலைபெற்று விட்டது.
இந்தியாவில் பெண்களுக்காக பிரத்யேக விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் என்று பல்வேறு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெறுகின்றன. ரஷ்யா, வியட்நாம், செர்பியா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் உள்பட பல நாடுகள் விடுமுறை விடுகின்றன.
அன்னையர் தினத்துக்கு சமமாக மகளிர் தினத்தை வித விதமாக கொண்டாடுகிறோம். இருந்தாலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைகள் அவ்வப்போது தலைதூக்குவது வேதனை அளிப்பதாகவும், வெட்கி தலைகுனிய வைப்பதாகவும் உள்ளது. எனவே, மகளிர் தினத்தில் வெறுமனே வாழ்த்துகளை சொல்லிவிட்டு கடந்து செல்லாமல், பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். வீடு, நாடும் சிறந்தோங்க உன்னதமான பெண்மையை போற்றுவோம்.