இன்று சர்வதேச தாய்மொழி தினம்..!
பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால், மொழியியல் பன்முகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.;
மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையிலும், தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999ம் ஆண்டில் யுனெஸ்கோ பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டு இன்று தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் சர்வதேச தாய்மொழி தினத்திற்கான கருப்பொருள் "பன்மொழிக் கல்வி என்பது தலைமுறைகளுக்கு இடையேயான கற்றலின் தூண்" என்பதாகும்.
"பாரம்பரிய அறிவு மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான வழித்தடமாக விளங்கும் தங்கள் மொழிகளைப் பாதுகாப்பதன் மூலம் பன்மொழி மற்றும் பன்முக கலாசார சமூகங்கள் செழித்து வளரும். இருப்பினும், பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால், மொழியியல் பன்முகத்தன்மையானது அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது
தற்போது உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தங்கள் தாய்மொழியில் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு சில பகுதிகளில் இது 90 சதவீதத்தை தாண்டியுள்ளது " என ஐக்கிய நாடுகள் சபையின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதிலும் 25 கோடி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளிக்கு செல்வதில்லை. 76.3 கோடி பெரியவர்கள் அடிப்படை கல்வியறிவில் தேர்ச்சி பெறவில்லை. தாய்மொழிக் கல்வியானது கற்றல், எழுத்தறிவு மற்றும் கூடுதல் மொழிகள் கற்பதை ஆதரிக்கிறது.
தாய்மொழி தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ சார்பில், சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், தரமான கற்றலின் முக்கிய அங்கமாக பன்மொழிக் கல்வி குறித்த இரண்டு குழு விவாதங்கள் இடம்பெறும்.