இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்.. மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்..!

தனிநபர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஊக்கம் அளிப்பதுடன், நிலையான வளர்ச்சி, செழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.;

Update:2024-03-20 17:22 IST

தனி நபராக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும், மகிழ்ச்சி இல்லையென்றால் வாழ்க்கை முழுமையானதாக இருக்காது. எப்போதும் பிரச்சினைகளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் மனம் அமைதியடையாது, மனம் அமைதியடையாவிட்டால் மகிழ்ச்சி நம்மைவிட்டு அகன்றுவிடும். எனவே, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை தரக்கூடிய செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

இன்று நாம் செய்யும் செயல்கள், நாம் விரும்பும் விஷயங்கள் மற்றும் நாம் எதிர்பார்க்கும் விஷயங்களில் மகிழ்ச்சியை கண்டறிவது, நாளைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு வாழ்வின் ஒரு அங்கமாக மகிழ்ச்சி இருப்பதால், உலகம் முழுவதும் மனித சமூகத்தின் மகிழ்ச்சிக்காக சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.

மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா. பொது சபையில் 2012ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மகிழ்ச்சி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

தனிநபர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஊக்கம் அளிப்பதுடன், நிலையான வளர்ச்சி, செழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபை வெளியிட்டுள்ள செய்தியில், "இது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள். மகிழ்ச்சி என்பது மனிதனின் அடிப்படை இலக்கு. ஐக்கிய நாடுகளின் பொது சபை இந்த இலக்கை அங்கீகரிக்கிறது. அனைத்து மக்களின் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் ஊக்குவிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு, உள்ளடக்கிய, சமமான அணுகுமுறை அவசியம்" என தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஞானிகளும் தன்னம்பிக்கை பேச்சாளர்களும் பல மேற்கோள்களை காட்டி அறிவுறுத்தி உள்ளனர்.

மகிழ்ச்சிக்கு பாதை இல்லை; மகிழ்ச்சியே பாதை. - புத்தர்

நம் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதுதான் - தலாய் லாமா

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை ஒரு குறிக்கோளுடன் இணையுங்கள்.. மக்கள் அல்லது பொருட்களுடன் அல்ல. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வாழ்க்கை மிகச் சிறந்த பொக்கிஷம். தயவு செய்து அதை கவலைகளால் வீணாக்காமல் ஒவ்வொரு நாளையும் முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுங்கள்.

கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ, ஆதிக்கம் செலுத்தாமல் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டு இருந்தால் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ முடியும். 

Tags:    

மேலும் செய்திகள்