இன்று சர்வதேச வன தினம்.. காடழிப்புக்கு எதிராக குரல் கொடுப்போம்!
நமக்கு பல்வேறு வகையிலும் நன்மைகளை வாரி வழங்கும் வனவளத்தை பேணிக் காக்கவேண்டியது அவசியம்.;
பூமியின் நுரையீரல் எனப்படும் வனங்கள் (காடுகள்), மனித வாழ்விற்கு இன்றியமையாத பல்வேறு பொருட்களை தருகின்றன. கால்நடை தீவனம், பசுந்தழை, மருத்துவ மூலிகைகள் என பல்வேறு பொருட்களை நமக்கு தாராளமாக வழங்குகின்றன. நம் வாழ்வாதாரத்திற்கு தேவையான நல்ல நீரையும், தூய காற்றையும் தருகின்றன.
சமநிலையான சூழலுக்கு வனங்கள் இன்றியமையாதவை. வெள்ளம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற ஆபத்தான நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் வனங்கள் குறைக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வனங்கள் அழிக்கப்படுவதாலும், பெரிய அளவில் மரங்கள் வெட்டப்படுவதாலும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை தகவலின்படி, நிலத்தை அடிப்படையாக கொண்ட வனவிலங்குகளில் பெரும்பாலானவை, 60,000-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மர இனங்களைக் கொண்ட வனங்களில் உள்ளன. வனங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்தபோதிலும், நாம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவு வனங்களை இழந்து வருகிறோம். அதாவது ஐஸ்லாந்தின் பரப்பளவு கொண்ட காடுகள் அழிக்கப்படுகின்றன.
எனவே, நமக்கு பல்வேறு வகையிலும் நன்மைகளை வாரி வழங்கும் வனவளத்தை பேணிக் காக்கவேண்டியது அவசியம். பூமியில் உயிர்களை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வனங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதி, சர்வதேச வன தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு உலக வன தினத்திற்கும் வனப்பாதுகாப்பிற்கான ஒரு கருப்பொருளை ஐ.நா.சபை அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டின் கருப்பொருள், "வனங்களும் புதுமையும்: ஒரு சிறந்த உலகத்திற்கான புதிய தீர்வுகள்" என்பதாகும்.
காடழிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தேவை என்பதை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது. காடழிப்பு காரணமாக ஆண்டுதோறும் 10 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதியை இழக்கிறோம். சுமார் 70 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதி காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பாதிப்புகளை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யக்கூடிய அமைப்புகளுக்கும், நிலையான மூலப்பொருட்கள் உற்பத்திக்கும், நில வரைபடம் மற்றும் காலநிலை நிதி மூலம் பழங்குடி மக்களை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அவசியமானவை.
இந்த நாளில், மரம் நடுதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இனிய நாளில் வன பாதுகாப்புக்கு உதவி செய்யவும், மரம் வளர்க்கவும் உறுதி ஏற்று செயல்படுவோம்! காடழிப்புக்கு எதிராக குரல் கொடுப்போம்..!