இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ..! ஐ.நா. சொல்வதை கொஞ்சம் கவனிப்போம்..!

ஊழல் என்பது சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நிர்வாக அமைப்புகளின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது.

Update: 2023-12-09 09:27 GMT

ஊழல் செய்வது, லஞ்சம் பெறுவது என்பது இப்போது சர்வசாதாரணமாகி விட்டது. அரசு வழங்கும் இலவச சேவைகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறித்து அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருந்தாலும் அடிமட்ட அளவில் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச, ஊழலை முழுவதுமாக ஒழிக்க முடியாத அவலம் நீடிக்கிறது.

எனவே, உலகம் முழுவதும் ஊழலை ஒழிக்கும் நோக்கத்திற்காக டிசம்பர் 9 ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2003-ம் ஆண்டு ஐ.நா. சபையால், இந்த தினம் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.

லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதோடு, ஊழலை ஒழிக்கவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே ஊழல் எதிர்ப்பு தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

அந்த வகையில் இன்று 20வது சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபையின் மேம்பாட்டு திட்ட நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

லஞ்ச ஊழலை ஒழிப்பதற்காகவும், சட்டவிரோத நிதி புழக்கத்தை தடுக்கவும் உலகம் முழுவதும் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், ஊழலை எதிர்த்துப் போராடுவதில் ஒரு குறிப்பிடத்தக்க தடை இருக்கிறது. உலகளவில் ஐந்தில் ஒருவர் பொது சேவையை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 124 நாடுகளில் ஊழல் அதிக அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது கவலையளிக்கும் விஷயம் ஆகும்.

ஊழல் என்பது சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நிர்வாக அமைப்புகளின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளிலும் முன்னேற்றத்தை பாதிக்கிறது. மோதலைத் தூண்டுகிறது மற்றும் சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துவதன் மூலம் சமாதான செயல்முறைகளைத் தடுக்கிறது. வறுமையை மோசமாக்குகிறது. மனித வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. இதுதவிர ஆயுத மோதலுக்கான நிதியுதவியை வழங்குகிறது.

ஐ.நா. குடும்பத்தின் ஒரு பகுதியான ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் (UNDP) உலகளாவிய, பிராந்திய மற்றும் நாடுகள் அளவில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல பிரச்சினைகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. 2024 ஆம் ஆண்டில், பொது கொள்முதல் உட்பட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் தாக்கத்தை சிறப்பாக அளவிட புதிய குறியீடுகளை உருவாக்க உள்ளது.

மேலும், எதிர்காலத்தில் ஊழலை ஒழிப்பதற்காக பல நாடுகள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்க முற்படும்போது, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை இணைக்க வேண்டும். அதேசமயம், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றின் மூலமாக மட்டுமே ஊழலின் எதிர்மறையான தாக்கத்தை முறியடிக்க முடியும். ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டால், ஒரு சிறந்த உலகத்திற்கான நமது ஏணியை யாராலும் அசைக்க முடியாது என்பதை உறுதி செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்