இப்போது இதுதான் டிரெண்ட்.. மழைக்கால சீசனை விரும்பும் சுற்றுலா பிரியர்கள்
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக ஓட்டல்களும், ஆன்லைன் புக்கிங் தளங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன.;
பொதுவாக கோடை விடுமுறையில்தான் பலரும் இன்ப சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுவார்கள். குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையாக அமைவது அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கோடை வெயில் சுட்டெரித்தாலும்கூட அதில் இருந்து தப்பிப்பதற்கு ஏதுவான இடங்களை தேடிப்பிடித்து சுற்றுப்பயணம் செய்வதற்கு பலரும் விரும்புகிறார்கள்.
அதனால் மற்ற மாதங்களை விட கோடை காலங்களில்தான் சுற்றுலாத்தலங்கள் களை கட்டும். அதைத்தொடர்ந்து பெய்யும் பருவ மழையை ரசிப்பதற்காக பயணம் மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கு மாறாக சில ஆண்டுகளாக பருவ மழை கால சமயத்தில் சுற்றுப்பயணம் செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவ மழை கால சமயத்தில் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து இருப்பதாக சுற்றுலா ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.
முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. பல இடங்களில் பருவ மழை இயல்பை விட அதிகம் பெய்திருப்பதே இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. பருவ மழை முடிந்த பிறகு பல சுற்றுலா தலங்கள் ரம்மியமான சூழலில் காட்சி அளிக்கும் என்பது சுற்றுலா பிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை கணக்கிட்டு முன்கூட்டியே ஓட்டல்களில் முன்பதிவு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அவர்களை ஈர்க்கும் விதமாக ஓட்டல்களும், ஆன்லைன் புக்கிங் தளங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன.
''கடந்த ஆண்டை விட முன்பதிவு 25 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பருவமழை காலம் சுற்றுலா துறைக்கு சாதகமான அம்சங்களை கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 9 சதவீதம் புக்கிங் அதிகரித்திருக்கிறது. இனி வரும் நாட்களில் இந்த சதவீதம் அதிகரிக்கக்கூடும்'' என்று பிரபல ஓட்டல் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நிகில் ஷர்மா கூறுகிறார்.
இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்ததால் பலரும் கோடை கால சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டவில்லை. இப்போது பருவ மழை ஓரளவு பெய்து சுற்றுலா தலங்களை குளிர்வித்து வருவதால் இந்த மழைக்கால சீசனை அனுபவிப்பதற்கு பலரும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள் என்பது சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதற்கேற்ப முன்பதிவும் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.
கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் சுற்றுலா வாரியங்கள் பயணிகளை குஷிப்படுத்தும் விதமாக மலபார் நதி திருவிழா மற்றும் ஆலப்புழாவில் படகுப் போட்டி, துபாரே யானைகள் முகாம் உள்பட பல்வேறு தனித்துவமான பயண அனுபவங்களை வழங்குகின்றன. லோனாவாலா, உதய்பூர், ஜெய்ப்பூர், ஊட்டி, முசோரி போன்ற சுற்றுலா இடங்கள் இந்த மழை சீசனில் இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இடங்களாக இருக்கின்றன.
இந்தியாவுக்குள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா செல்லவும் ஆர்வம் காட்டுகிறார்கள். கெடுபிடிகள் இல்லாமல் எளிமையாக விசா கிடைக்கும் பூட்டான், இலங்கை, பாலி, மலேசியா, அஜர்பைஜான், ஜார்ஜியா போன்ற இடங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. துபாய், சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு செல்லவும் முனைப்பு காட்டுகிறார்கள்.