நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும்.;
உண்ணும் உணவு விரைவாக செரிமானமாக வேண்டும். அப்போதுதான் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். வயது, பாலினம், வளர்சிதை மாற்றம், உணவின் வகை உள்ளிட்டவற்றை பொருத்து செரிமான செயல்முறை அமையும். இருப்பினும் சாப்பிடும் உணவை பொருத்து செரிமான செயல்முறை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறலாம் என்பது உணவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும் என்பது பற்றி பார்ப்போம்.
தண்ணீர்
தண்ணீர் விரைவாக செரிமானம் ஆகக்கூடியது. இருப்பினும் வயிறு நிரம்பியுள்ளதை பொறுத்து அது ஜீரணமாகும் நேரம் மாறுபடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் ஐந்து நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால் அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டு அதன் பிறகு தண்ணீர் பருகினால் அது உறிஞ்சப்படுவதற்கு சில மணி நேரமாகிவிடும்.
ஜூஸ்
பழச்சாறு பருகினால் அது சுமார் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் உறுப்புகளை சென்றடைந்துவிடும். அதன் மூலம் ஆரோக்கியம் வலுப்படும். ஸ்மூத்திகளை பருகினால் அவை செரிமானம் ஆவதற்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும். எந்த உணவுகளை உட்கொண்டாலும் அதனுடன் இது போன்ற நார்ச்சத்துமிக்க உணவுகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். அவைதான் செரிமான மண்டலத்திற்கு சிறந்தவை.
பழங்கள்
முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும். தர்பூசணி பழம் விரைவாக செரிமானமாகக்கூடியது. அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செரிமான செயல்முறை ஒட்டுமொத்தமாக நடைபெற்று முடிந்துவிடும். குடல் இயக்கம் சுமூகமாக நடைபெறுவதற்கும் உதவி புரியும். அதேவேளையில் செரிமான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உணவுகளுடன் பழங்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
காய்கறிகள்
பழங்களை விட காய்கறிகள் ஜீரணிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். இருப்பினும் கீரை, வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் செரிமானமாகி வயிற்றை விட்டு வெளியேற சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்களில் செரிக்கப்படும்.
கேரட், பீட்ரூட் உள்ளிட்ட வேர் காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
தானியங்கள்
பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் ஒன்றை மணி நேரம் ஆகலாம். அதுபோல் பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.
இறைச்சி
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். அதே நேரத்தில் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் செரிமானம் அடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் அவை ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகும்.
பால் பொருட்கள்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள் ஜீரணிக்க சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக்கட்டிகள் ஜீரணமாக 5 மணி நேரம் கூட ஆகலாம். முட்டையின் மஞ்சள் கரு மட்டும் ஜீரணமாகுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.
நட்ஸ்கள்-விதைகள்:
எள், சூரியகாந்தி, பூசணி விதைகள் ஜீரணமாக சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். பச்சை வேர்க்கடலை, பாதாம், முந்திரி பருப்புகள், அக்ரூட் பருப்புகள் போன்றவை ஜீரணமாகுவதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.