கடன் சுமை தீர வழி உண்டா?

ஒருவருக்கு வீடு வாங்குவதற்கு ஜாதகத்தில் யோகம் இல்லை என்றால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பெயரில் வீட்டுக்கடனை பெற்று வீடு வாங்கலாம்.

Update: 2024-06-18 08:33 GMT

ஒருவர் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அவருக்கு கடன், பகை, நோய் இருக்கக்கூடாது. இந்த மூன்றும் இல்லாதவராக இருப்பவர்தான் இவ்வுலகத்தில் கோடீஸ்வரன் என்று கருதலாம். கடன்களை பொருத்தவரை வீட்டுக் கடன், வாகனக்கடன், மருத்துவக் கடன், நகைக் கடன், கல்விக் கடன், திருமண கடன் போன்ற பல்வேறு கடன்கள் உள்ளன.

ஒருவர் தனக்கு தாங்க முடியாத அளவுக்கு கடன் இருந்தால், கடன் சுமை எப்போது தீரும்? என ஜாதகரீதியான விளக்கங்களையும் அதற்கான பரிகாரங்களையும் நாடுவது வழக்கம்.

"நல்லாதான் சம்பாதிச்சு இருந்தேன், வீட்டுக் கடன் ஒரு சுமையா ஆகிடுச்சு" என்று ஜாதகம் பார்க்க வரும் பலர் ஜோதிடரிடம் புலம்புவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஐ.டி. போன்ற துறையில் இருப்பவர்கள்தான் அதிகமாக பாதித்துள்ளனர். காரணம் அவர்கள் மாத சம்பளம் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் என்று வாங்குகின்றனர். இந்த சம்பளத்தை காரணமாக வைத்துக்கொண்டு சொந்த வீடு வாங்கலாம் என்ற கனவோடு வீட்டுக் கடனை வாங்கி வாங்கிவிடுகின்றனர். பின்பு ஆட்குறைப்பு காரணமாக வேலையை இழக்க நேரிட்டால், கடனுக்கான தவணை (EMI) செலுத்த முடியாமல் அதாவது கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்றனர்.

இதே போன்று பெற்றோர்கள் கடன் வாங்கி பிள்ளைகளுக்கு ஆடம்பரமாக திருமணத்தை நடத்திவிட்டு இன்னும் வட்டி மட்டுமே கட்டுகிறோம் என்றும் அலுத்துப்போய் சொல்கின்றனர்.

இவ்வாறு கழுத்தை நெரிக்கும் கடனுக்கும் ஜாதகத்திற்குமான தொடர்பு மற்றும் கடன் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விரிவாக பார்ப்போம்.

கடனுக்கும் ஜாதகத்திற்கும் சம்பந்தம் உண்டா?

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் அந்த ஜாதகத்தின் 12 கட்டத்தில் நம் அனைவருக்கும் முக்கியமான கட்டமாக கருதப்படுவது ஆறாமிடம் என்று சொல்லக்கூடிய ருண ரோக சத்ரு ஸ்தானம் மிக முக்கியம் என்பர். ஜாதகத்தில் இந்த ஒரு ஸ்தானத்திற்கு மட்டும் இந்த மூன்று காரகங்களை கொடுத்து வைத்திருக்கின்றனர். அதற்காக ஒரு ஸ்தானத்தை கொடுத்துவிட்டனர். அதேபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவங்கள் உள்ளன. குரு என்றால் தன காரகன் என்றும், சுக்கிரன் என்றால் களத்திர காரகன் என்றும், புதன் என்றால் புத்தி காரகன் என்றும், சூரியன் என்றால் பிதுர் காரகன் என்றும், சந்திரன் என்றால் மாதுர் காரகன் என்றும் அழைக்கின்றனர். ஆனால் இந்த சனிக்கு மட்டும் நோய் காரகன், ருண காரன் அதாவது கடன் காரகன் மற்றும் ஆயுள்காரகன் என்றெல்லாம் உள்ளது. ஒரு ஜாதகத்தில் சனி பகவான் நன்றாக இருக்கும்பட்சத்தில் நிச்சயமாக கடன் தொல்ல இருக்காது. மேலும் சனி பகவானை மட்டுமே வைத்துக்கொண்டு பார்க்க முடியாது. காரணம் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் கடன் ஸ்தானம் என்பது வேறுபடும், அது அமைந்துள்ள சாரம் மற்றும் பார்வை போன்ற ஜாதக கிரக நிலையை ஒட்டியும் பலன் சொல்ல வேண்டும்.

எந்தெந்த ஸ்தானத்துடன் தொடர்பு இருந்தால் கடன் ஏற்படும்?

பொதுவாக ருண ரோக சத்ரு ஸ்தானாதிபதியாகிய கிரகங்கள் எங்கே இருக்கின்றதோ, அதற்கு ஏற்ப கடன் வாங்குவார்கள். இந்த கடனை மீண்டும் அடைக்க இயலுமா என்பது அந்த ஸ்தானாதிபதி மறைவு ஸ்தானங்களில் உள்ளாரா அல்லது உச்ச ஸ்தானத்தில் உள்ளாரா அல்லது நீச்ச ஸ்தானங்களில் யாருடன் தொடர்புள்ளார்? யார் பார்வை உள்ளது? கூட்டுகிரகங்களின் சேர்க்கை மற்றும் லக்னாதிபதியின் பலம் என்ன? ஆகியவற்றை பொருத்து கணிக்க முடியும். பொதுவாக சுகஸ்தானாதிபதியாகிய கிரகம் நன்கு இருந்து ருண ஸ்தானாதியதியும் தீய ஸ்தானங்களில் இருந்து செவ்வாய் பலவீனப்பட்டு இருந்தால் நிச்சயமாக வீட்டுக் கடனை அடைப்பது மிகவும், சிரமமாக அமைகிறது.

கடன் வாங்கும் முன் கவனிக்கப்பட விசயங்கள் என்னென்ன?

நாம் முதலில் வீட்டுக் கடனோ அல்லது எந்த வகையான கடனோ வாங்குவதற்கு முன் நாம் அந்த கடனை எளிதாக அடைக்க இயலுமா மற்றும் எந்த திசா புத்தியில் அதாவது எந்த நேரத்தில் கடன் பெறலாம் என்பதை நாம் முன் கூட்டியே நல்ல அனுபவமுள்ள ஜோதிடரிடம் சென்று நாம் அறிந்து கொண்டு அதன்படி வாங்க வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு வீட்டு கடன் வேண்டுமென்றால் அவருக்கு வீட்டு யோகம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பெயரில் வீட்டுக்கடனை பெற்று வீட்டை வாங்கலாம்.

கடன் வாங்கக் கூடாத நட்சத்திரங்கள்

பரணி, பூரம், பூராடம், மகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, சித்திரை, சுவாதி, விசாகம், கிருத்திகை, திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்களில் கடன் வாங்க கூடாது. மற்ற நட்சத்திர நாட்களில கடன் வாங்கினால் நிச்சயமாக கடனை திருப்பி அடைத்து விடலாம்.

தீர்வு

அதேசமயம், கடன் வாங்கக் கூடாத நட்சத்திர நாட்களில் கடன் வாங்கி விட்டால், கடனை அடைக்கும் வழி இருக்கிறதா? என்றால் அதற்கும் வழி இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை கடைபிடித்தால் விரைவில் கடன் அடைபடும்.

கடனை திருப்பி கொடுக்க ஏற்ற நாட்கள்

செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் கடனை திருப்பி கொடுத்தால் நிச்சயம் விரைவில் கடன் அடைபடும்.

கடன் திருப்பி கொடுக்க ஏற்ற நட்சத்திர நாட்கள்

கேதுவின் நட்சத்திரமான அஷ்வினி நட்சத்திரம் மற்றும் சனியின் நட்சத்திரமான அனுசம் நட்சத்திர நாட்களில் கடனை திருப்பி கொடுத்தால் சுலபமாக கடன் அடைபடும்.

கடன் திருப்பி கொடுக்க ஏற்ற லக்னங்கள்

மேஷம் மற்றும் விருச்சிக லக்னங்களில் ஒரு சிறு தொகையாவது கடனை திருப்பிக் கொடுக்க முயன்றால் விரைவில் கடன் அடைபடும்.

கடன் திருப்பி கொடுக்க ஏற்ற திதிகள்

பொதுவாக நவமி திதியை ஒதுக்குவர். ஆனால், கடனை விரைவில் அடைக்க வேண்டுமானால் அவர்கள் நவமி திதியில் கடனை திருப்பிக் கொடுத்தால் விரைவில் கடன் அடைபடும்.

கடன் திருப்பி கொடுக்க ஏற்ற கரணம்

பத்திரை கரணம் அன்று கடனை திருப்பிக் கொடுக்க முயன்றால் விரைவில் கடன் அடைபடும்.

கடன் திருப்பி கொடுக்க ஏற்ற ஓரை

செவ்வாய் ஓரையில் கடனில் ஒரு சிறு தொகையை திருப்பிக்கொடுத்தால் விரைவில் கடன் அடைபடும்.

 

உதாரண ஜாதகம் 1: வீட்டுக் கடனை வாங்கி முழுமையாக அடைத்தவரின் ஜாதகம்

இவரது ராசி விருச்சிகம், நட்சத்திரம் விசாகம், லக்னம் மகரம் ஆகும். இவரது ருண ரோக சத்ரு ஸ்தானாதிபதி சுக்கிரன் அவர் கேந்திரத்தில் உள்ளார். சுக ஸ்தானத்தில் பூமி காரகனாகிய செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளது என்பது இவருக்கு வீட்டு யோகம் அமைந்திருப்பதை காணலாம். கடன் முடிக்கும் காலத்திற்கு உள்ளாகவே விரைவில் வீட்டுக் கடனை முடித்து விட்டார்.

உதாரண ஜாதகம் 2: வீட்டுக் கடனை அடைக்க முடியாத ஜாதகம்

இவரது ராசி மகரம், நட்சத்திரம் திருவோணம், லக்னம் கன்னி ஆகும். இவர் தன் வீட்டுக்கடனை அடைக்க முடியாத நிலையில், வீட்டை வங்கி ஏலத்தில் விட்டு கடன் தொகையை பெற்றுக் கொண்டது. கடனை அடைக்க முடியாமல் வீட்டை இழந்திருக்கின்றார். காரணம் இவரது ருண ரோக சத்ரு ஸ்தானாதிபதி சனி பகவான் இவர் அஷ்டம ஸ்தானத்தில் நீச்சம் பெற்றுள்ளதை காணலாம். மேலும், அஷ்டமாதிபதியும் லக்ன கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்.

அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப நன்கு ஆராய்ந்து பார்த்து நாம் அதற்கேற்ற கடவுளுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்தால் இந்த கடன் பிரச்சினை தீரும்.

பொதுவான பரிகாரங்கள்

திங்கட்கிழமை சிவபெருமானுக்கு நெய் தீபம் 6 விளக்கு ஏற்றி வழிபடுவதும். வில்வ இலையை சிவ பெருமானுக்கு சாத்தவேண்டும். தொடர்ந்து 6 வாரம் இவ்வாறு செய்தால் கடன் விரைவில் அடைபடும்.

பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் முருகப் பெருமானையும் வழிபட்டால் கடன் விரைவில் அடைபடும்.

திங்கட்கிழமை பெருமாளை திருப்பதியிலோ அல்லது அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கோ சென்று வழிபடும்போது கடன் சுமை நீங்கும்.

கட்டுரையாளர்: ஜோதிடர் ந.ஞானரதம், செல்- 9381090389.

Tags:    

மேலும் செய்திகள்