குணப்படுத்தும் கரங்கள்.. அக்கறையுள்ள இதயங்கள்..! இன்று தேசிய மருத்துவர்கள் தினம்

சமூகத்திற்கு சேவை செய்யும் மருத்துவர்கள் மற்றும் தொழில்முறை சுகாதார பராமரிப்பு பணியில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-01 11:54 GMT

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவில் ஜூலை 1-ந் தேதியை, தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த தினத்தை பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்கள் மட்டுமே கொண்டாடி வருகின்றன. 

மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்-மந்திரி டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்த நாள், தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாங்கிப்பூரில் 1882-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பிறந்தவர் பிதான் சந்திர ராய். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அதுவும் ஒரே சமயத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எம்.ஆர்.சி.எஸ். ஆகிய படிப்புகளை, இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்களில் படித்து சாதனை படைத்தவர். சிறந்த மருத்துவராகவும், விடுதலை இயக்க போராளியாகவும் புகழ் பெற்றவராக இருந்தார், பிதான் சந்திர ராய்.

மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்-மந்திரியாக பணியாற்றியவர். 1948-ம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை, அதாவது 1962-ம் ஆண்டு வரை, 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தார். அவர் அந்தப் பதவியில் இருந்த காலத்தில், மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். தற்போது மேற்கு வங்காளத்தில் முதன்மை நகரங்களாக விளங்கும் துர்காப்பூர், கல்யாணி மற்றும் கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பிதான்நகர் ஆகியவை உருவாக காரணமாக இருந்தார்.

இவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, இவரது சாதனைகளை கருத்தில் கொண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட பிதான் சந்திர ராயை நினைவுகூரும் வகையில்தான், அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளான ஜூலை 1-ந் தேதியை, தேசிய மருத்துவர் தினமாக இந்தியா அறிவித்துள்ளது. 80 ஆண்டு காலம் வாழ்ந்த பிதான் சந்திர ராய், தன்னுடைய பிறந்த தினத்திலேயே (ஜூலை 1, 1962) மறைந்தார்.

அவரது பிறந்த நாளான இன்று தேசிய மருத்துவர்கள் தினமான கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் கருப்பொருள் "குணப்படுத்தும் கரங்கள், அக்கறையுள்ள இதயங்கள்" என்பதாகும். மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, இரக்க குணம் மற்றும் உயிரை காப்பாற்றுவதில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கு ஆகியவற்றை இந்த கருப்பொருள் நினைவூட்டுகிறது.

இந்த நாளில், மருத்துவ சிகிச்சையின் முக்கியத்துவம் பற்றி அனைவரும் அறிந்துகொள்வதுடன், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் மருத்துவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்க வேண்டும்.

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவ துறையினருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இனிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள்! இன்று, மருத்துவர்கள் மற்றும் தொழில்முறை சுகாதார பராமரிப்புப் பணியில் உள்ளவர்களுக்கும், அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கருணையுடன் தன்னலமின்றி சமூகத்துக்கு, குறிப்பாக வறிய மற்றும் நலிவடைந்த மக்களுக்கு சேவை செய்வதற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள், நோய்களை எதிர்த்துப் போராடுவதிலும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பதிலும், கடினமான நெருக்கடிகளின் போது ஆறுதல் அளிப்பதிலும் மேற்கொள்ளும் அயராத முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. உங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகள், ஒரு உத்வேகமுள்ள ஆரோக்கியமான #ஃபிட்இந்தியாவை வடிவமைக்கின்றன" என குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்