'டைட்டன்' விபத்து முதல் ஹமாஸ் தாக்குதல் வரை... 2023-ல் கவனம் பெற்ற சர்வதேச நிகழ்வுகள் ஓர் பார்வை!!
2023-ம் ஆண்டு சர்வதேச அளவில் கவனம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகள் குறித்து இங்கே காணலாம்.;
* துருக்கி-சிரியா நிலநடுக்கம் (பிப்ரவரி 6)
துருக்கியில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந்தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
துருக்கியின் 10 மாகாணங்களை இந்த நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியா வரை நீண்டது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர். இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அந்த இருநாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின.
அதன்படி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சென்ற பேரிடர் மீட்புக் குழுவினர் இரு நாடுகளையும் சேர்ந்த மீட்புக் குழுக்களுடன் இணைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இதன்பலனாக நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் உள்பட ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.
இடிபாடுகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் கூறியிருந்தார். அதே சமயம் துருக்கியில் நிலநடுக்கத்தால் 50,783 பேர் உயிரிழந்ததாகவும், 1,07,204 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியாவில் 8,476 பேர் உயிரிழந்த நிலையில், 14,500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். துருக்கியின் வரலாற்றில் மிகவும் மோசமான நிலநடுக்கமாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
* ஆஸ்கர் விருதுகள் (மார்ச் 12)
அகாடமி விருது எனப்படும் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது டேனியல் குவான், டேனியல் ஸ்கீனெர்ட் இயக்கத்தில் வெளியான 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' (Everything Everywhere all at once) திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் இந்த படம் விருதுகளை வென்றது.
'தி வேல்' (The Whale) திரைப்படத்தில் நடித்த பிரெண்டன் பிரேசர் (Brendan Fraser) சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' (Everything Everywhere all at once) திரைப்படத்தில் நடித்த மிச்செல் யோஹ் வென்றார். ஆசிய பெண் ஒருவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.
சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை 'ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட்' (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்றது.
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (The Elephant Whisperers) ஆவண குறும்படத்தின் இயக்குனர் கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ வென்றனர். இந்த படம் தமிழகத்தில் படமாக்கப்பட்டிருந்தது. தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானைக் குட்டிகளை பராமரிக்கும் பொம்மன்-பெள்ளி என்ற பழங்குடியின தம்பதியின் கதையை விவரிக்கிறது இந்த ஆவண குறும்படம்.
சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை, ராஜமவுளி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
* கிரெம்ளின் மாளிகை மீது டிரோன் தாக்குதல் (மே 3)
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் இந்த போரால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த சூழலில், கடந்த மே மாதம் 3-ந்தேதி மாஸ்கோவில் உள்ள ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதல் நடத்திய டிரோன்களை அதிபர் மாளிகை பாதுகாப்பு அமைப்பான லேசர் ஆயுதம் சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல் நடந்தபோது, ரஷிய அதிபர் புதின் கிரெம்ளின் மாளிகையில் இல்லை என்று கூறப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கர்சன் ஆகிய நகரங்கள் மீது ரஷியா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கிரெம்ளின் மாளிகையின் மீது நடத்தப்பட்ட இந்த டிரோன் தாக்குதலால் உக்ரைன்-ரஷியா இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.
* இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா (மே 6)
இங்கிலாந்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். அவர் 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார்.
ராணியின் மறைவுக்குப் பின்னர் மன்னராக சார்லஸ் அரியணை ஏறியபோதும், அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமலேயே இருந்து வந்தது. இந்த சூழலில் மே 6-ந்தேதி மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூவமாக அறிவித்தது.
இங்கிலாந்தில் கடைசியாக கடந்த 1953-ம் ஆண்டு ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து கடந்த மே மாதம் 6-ந்தேதி மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உலக நாடுகளின் தலைவர்கள், இங்கிலாந்திலுள்ள தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முடிசூட்டு விழாவில் பங்கேற்றார்.
* டைட்டன் நீர்மூழ்கி விபத்து (ஜூன் 18)
கடந்த 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளான 'டைட்டானிக்' கப்பல், தற்போது கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் உள்ள கடல்படுகையில் காணப்படுகிறது. இதனை பார்வையிடும் பொருட்டு 'ஓஷன்கேட்' என்ற அமெரிக்க தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட 'டைட்டன்' நீர்மூழ்கி கப்பல் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி பயணப்பட்டது.
இந்த சுற்றுலா நீர்மூழ்கி கப்பலில் இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் (58), இங்கிலாந்து தொழிலதிபர் ஷஷாத் தாவூத் (48), அவரது மகன் சுலைமான் தாவூத் (19), பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிகாரி பால் ஹெண்ட்ரி(77), ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் (60) ஆகிய 5 பேர் பயணித்தனர்.
அட்லாண்டிக் கடலின் அடி ஆழத்தில் 1.45 மணி நேரம் செங்குத்தாக டைட்டன் நீர்மூழ்கி கப்பல் சென்ற நிலையில், திடீரென அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கனடா, அமெரிக்க கடற்படையினர் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலின் அதீத அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியதாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில், நீர்மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். தொடர்ந்து நீர்மூழ்கியின் உடைந்த பாகங்களை அமெரிக்க கடற்படையினர் மீட்டனர். இதன்பின்னர் நடைபெற்ற விசாரணையில், டைட்டன் நீர்மூழ்கியில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
* இம்ரான் கான் கைது (ஆகஸ்ட் 5)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார்.
இம்ரான் கான் தன்னுடைய பதவிக்காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
ஆனால் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட 'சிபர்' (Cipher) வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான், சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் நயீம் பஞ்சுதாவிடம் கூறியிருந்தார். சிறையிலேயே இம்ரான் கானை கொல்ல சதி நடப்பதாக அவரது மனைவி புஸ்ரா பீவி கவலை தெரிவித்திருந்தார். இம்ரான் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
* வாக்னர் குழு விமான விபத்து (ஆகஸ்ட் 23)
ரஷியாவில் செயல்பட்டு வரும் தனியார் ராணுவ அமைப்பு வாக்னர் குழு. இதன் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின். இவர் கடந்த ஜூன் மாதம் அதிபர் புதின் அரசுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியதன் மூலம் உலகின் கவனத்துக்கு வந்தார்.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ அருகே நடந்த விமான விபத்தில் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்தார். வாக்னர் குழுவைச் சேர்ந்த 10 பேர் சென்ற விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனிடையே யெவ்ஜெனி பிரிகோஜின் புதின் அரசுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியதால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புதின் அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இந்த விமான விபத்து தொடர்பாக நீண்ட நாட்களாக மவுனம் காத்து வந்த ரஷிய அதிபர் புதின், முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசினார். அப்போது அவர், "விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் உக்ரைன் போரில் கணிசமான பங்களிப்பை செய்துள்ளனர். நாங்கள் அதை நினைவில் கொள்கிறோம், ஒருபோதும் அவர்களை நாங்கள் மறக்கமாட்டோம்" என்று தெரிவித்தார்.
* டொனால்டு டிரம்ப் கைது (ஆகஸ்ட் 24)
அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் டொனால்டு டிரம்ப். ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.
இதில் தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா கோர்ட்டில் நடைபெற்ற நிலையில், டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
அதே சமயம் ஆகஸ்ட் 25-ந்தேதிக்குள் தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி அட்லாண்டா சிறையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சரணடைந்தார். அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், டிரம்ப் விடுவிக்கப்பட்டார்.
* நோபல் பரிசுகள் (அக்டோபர் 2)
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி கடந்த அக்டோபர் 2-ந்தேதி தொடங்கியது.
இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வென்றவர்களின் பட்டியல்;-
* அமைதிக்கான நோபல் பரிசு - நர்கீஸ் முகமதி
* இலக்கியத்திற்கான நோபல் பரிசு - ஜான் பாஸ்சி
* இயற்பியலுக்கான நோபல் பரிசு - பியரி அகோஸ்டினி, பெரென்க் கிராவுஸ், ஆனி ஹுலியர்
* வேதியியலுக்கான நோபல் பரிசு - அலெக்செய் எகிமோவ், லூயிஸ் இ.பிரஸ், மோங்கி பவெண்டி
* மருத்துவத்திற்கான நோபல் பரிசு - ட்ரூவ் வெய்ஸ்மேன், கேடலின் கரிகோ
* பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு - கிளாடியா கோல்டின்
* ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் (அக்டோபர் 7)
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அதோடு ரிக்டர் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.
இதனால் நகரில் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பதிவானது.
* இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் (அக்டோபர் 7)
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குக்கரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், 'ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்' என்ற பெயரில் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.
மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கம் தனது பாதுகாப்புப்படை மற்றும் ரிசர்வ் படைகளை அதிரடியாக களத்தில் இறக்கியது. மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
இதையடுத்து 'ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்' என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருக்கும் இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தியது. ஹமாசை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் 2 மாதங்களைக் கடந்து நீண்டு வருகிறது.
இந்த போரால் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசா பகுதியின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், 5 லட்சம் பேர் பசியால் வாடுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஐரோப்பாவில் வெப்ப அலை
புவி வெப்பமயமாதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சில நாடுகளில் அதீத மழைப்பொழிவும், சில நாடுகளில் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு வருகின்றன.
வெப்பம் பற்றிய அளவீடுகள் தொடங்கப்பட்ட பின், இந்த ஆண்டு ஜூன் மாதம் தான் உலகின் அதிகபட்ச சராசரி வெப்பம் பதிவாகி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முந்தைய காலத்தை விட சராசரி வெப்ப அளவு அடுத்த சில ஆண்டுகளில் 1.5 டிகிரி வரை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதனிடையே ஐரோப்பிய நாடுகளில் 2023-ம் ஆண்டு கோடைக்காலத்தில் வரலாறு காணாத வெப்ப அலை வீசியது. இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி, போலாந்து உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை கணிசமாக அதிகரித்தது. குறிப்பாக இத்தாலியின் பல்வேறு நகரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது.
அங்கு பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை முடிந்தவரை தவிர்க்குமாறும், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்புகள் உள்ளவர்களை அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. மேலும் இனி வரும் காலங்களில் வெப்ப அலைவீச்சை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.