அயலான் முதல் கேப்டன் மில்லர் வரை... பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள்...!

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நாளை (ஜனவரி 12) திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.;

Update:2024-01-11 15:35 IST

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று பல பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த 'வாரிசு' படமும் அஜித் நடித்த 'துணிவு' படமும் வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்தனர்.

இதற்கு முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு அஜித் நடித்த 'விஸ்வாசம்' படமும் ரஜினி நடித்த 'பேட்ட' படமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இப்படி ஒவ்வொரு பொங்கலுக்கும் பெரிய உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஆண்டு தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்கள் மோதிக்கொள்ள உள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நாளை (ஜனவரி 12) திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் :

அயலான் :

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஏலியன் கதைக்களத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் இந்த படத்திலிருந்து 'வேற லெவல் சகோ' என்ற பாடல் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகியிருந்தது. படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.

அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படம் நாளை பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

கேப்டன் மில்லர் :


நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்கள் 1940 மற்றும் 1990 களில் நடப்பது போன்றும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போன்றும் வெளியாக இருக்கிறது. இந்த படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகியுள்ளது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. அந்த வகையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் நாளை திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

மெரி கிறிஸ்துமஸ் :


தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.

இதற்கிடையே 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில் தொழில்நுட்ப சிக்கல்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1 :


இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ரவி.ஜி, உத்ரா உன்னி கிருஷ்ணன் குரலில் வெளியான 'கண்ணே செல்ல கண்ணே' பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் :

கேரளா ஸ்டோரி :


விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் கோர்ட்டு உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. இந்நிலையில் இந்த படம் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை 'ZEE 5' ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஜோ :


அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜோ'. இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சார்லி, அன்பு தாசன், ஏகன், கெவின் ஃபெல்சன், ப்ரவீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி வெளியான 'ஜோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த பலரும் ரியோ ராஜ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் படம் சிறப்பாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இந்த படத்தின் ஒடிடி வெளியீடு குறித்து ரசிகர்கள் பலர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இந்த படம் நாளை 'ஹாட்ஸ்டார்' ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சேரனின் ஜர்னி :


3 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சேரன் புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி உள்ளார். ஒரு வேலைக்காக போட்டியிடும் 5 பேரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது.

'ஜர்னி' என பெரியரிட்டுள்ள இந்த வெப் சீரிஸில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், திவ்யபாரதி, கலையரசன், காஷ்யப் பார்பையா, மாரிமுத்து, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் நேரடியாக 'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

செவப்பி :


கிராமத்தில் வசிக்கும் ஐந்து வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்து உருவாகி இருக்கும் படம், 'செவப்பி'. இதை ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரன் தயாரித்துள்ளனர். எம்.எஸ்.ராஜா எழுதி இயக்கியிருக்கிறார்.

பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன், டில்லி, செபாஸ்டியன் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். மனோகரன் எம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை 'ஆஹா தமிழ்' ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்