இரவில் தூங்க செல்லும் முன் தொடக்கூடாத உணவுகள்.. சாப்பிட்டால் என்ன ஆகும்?
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சில உணவு வகைகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. அந்த உணவுகள் எவை என்பது குறித்தும் அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் இங்கே பார்ப்போம்
- வெறும் வயிற்றிலோ அல்லது தூங்குவதற்கு முன்போ தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தயிர், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தி தூக்கத்தை சீர்குலைத்துவிடும்.
- தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அதிக அமிலத்தன்மை இருப்பதால் அதனை இரவில் தவிர்க்க வேண்டும்.
- இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகரிக்க செய்யலாம். அதனால் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும்.
- கிரீன் டீயில் காபின் உள்ளடங்கி இருப்பதால் அதனை இரவு நேரத்தில் பருகுவதை தவிர்க்க வேண்டும். அதனை இரவில் உட்கொள்ளும் போது இதயத் துடிப்பு அதிகரிப்பு, பதற்றம் மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பகல் பொழுதுதான் கிரீன் டீ பருகுவதற்கு சிறந்தது.
- இரவு தூங்குவதற்கு முன்பு பாலாடைக்கட்டி உட்கொள்வது தூக்கத்திற்கு தடையாக அமையும். அதிக நேரம் விழிப்பு நிலையில் இருக்க வைத்துவிடும்.
- துரித உணவுகளுடன் உட்கொள்ள வழங்கப்படும் கெட்ச்சப்பை இரவில் தவிர்க்க வேண்டும். அதிலிருக்கும் அமிலம் குடல் ஆரோக்கியத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.
- இரவில் மது அருந்துவது தூக்க சுழற்சிக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். நிம்மதியாக தூங்கி எழ முடியாது.
- ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் பிரச்சினையை ஏற்படுத்தும்.
- இரவில் வெங்காய சாலட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றில் அழுத்தத்தையும், வாயு தொந்தரவையும் உருவாக்கலாம். தொண்டைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
- இனிப்பு அதிகம் கலந்து தயாரிக்கப்படும் தானிய வகை உணவுகளை இரவில் உட்கொள்வது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யலாம். அல்லது சர்க்கரையின் அளவை வீழ்ச்சியடைய வைக்கலாம். அதன் தாக்கம் தூக்கத்திலும் எதிரொலிக்கும். தூக்கமின்மையால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
- இரவில் மிளகாய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் காரமான உணவுகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். தூக்கத்தை குறைக்கும்.
- இரவில் உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் வயிற்றுவலி மற்றும் தசைப் பிடிப்புகள் ஏற்படலாம்.
- பகலில் நிறைய தண்ணீர் பருகலாம். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தண்ணீர் பருகும் அளவை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவில் அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
- இரவில் தூங்க செல்வதற்கு முன்பு அதிகமாக உணவு உட்கொள்வதும் தவறானது. அது ஜீரணமாவதற்கு இரவு முழுவதும் உடல் போராட வேண்டி இருக்கும். அதன் காரணமாக தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். காலையில் சோர்வாகவும், மோசமான மனநிலையிலும் எழுந்திருப்பீர்கள்.