பெண்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்த பாத்திமா பீவி
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்காலம் முடிந்தபின், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம் அரசியல் அரங்கிலும் பாத்திமா பீவி தடம் பதித்தார்.
தமிழக முன்னாள் ஆளுநரும் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியுமான பாத்திமா பீவி காலமானார். முதுமை சார்ந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 96.
கேரளாவின் பத்தனம்திட்டாவில் 1927ஆம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி பிறந்த பாத்திமா பீவி, அங்குள்ள கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பின் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். சட்ட இளங்கலைப் பட்டப்படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயின்றார்.
1950ஆம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்து, கேரளாவின் கீழ்நிலை நீதிமன்றங்களில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கிய பாத்திமா பீவி, நீதித்துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். முன்சீப்பில் தொடங்கி, முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர், உயர் நீதிமன்ற நீதிபதி என சிறப்பாக செயல்பட்டார்.
1989இல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றபின், 1989ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றார். இப்பணியிலிருந்து 1992ல் ஓய்வு பெற்றார்.
தனது பணிக்காலத்தில் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், அடையாளமாகவும் பணியாற்றியவர் பாத்திமா பீவி. உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்காலம் முடிந்தபின், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம் அரசியல் அரங்கிலும் தடம் பதித்தார். 1997 முதல் 2001 வரை தமிழக ஆளுநராக பணியாற்றினார்.
நீதிபதி பாத்திமா பீவியை கவுரவிக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் 'நீதிப் பாதையில் துணிச்சலான பெண்' என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஆர் பார்வதி தேவியின் திரைக்கதை, பிரியா ரவீந்திரன் இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படத்தை கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம் தயாரித்தது. 30 நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படம், பாத்திமா பீவியின் நீதித்துறை பயணத்தை சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தது.