கம்ப்யூட்டர் மானிட்டரை நீண்ட நேரம் பார்க்கிறீர்களா..? கண் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை
கைகளால் கண்களை அழுத்தி தேய்க்கக் கூடாது. அதனால், கைகளில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம்.
மக்களின் அன்றாட வாழ்வில் செல்போன் மற்றும் இணையம் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான பணிகளில் கம்ப்யூட்டர் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இவ்வாறு செல்போன்களும், கம்ப்யூட்டர்களும் (கணினி) ஆதிக்கம் செலுத்தும் இன்றைய இணைய தொழில்நுட்பம் நம் கண்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கிறோம். இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள் கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வை கோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்றவை ஆகும்.
தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரை உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கம்ப்யூட்டரை பார்ப்பதால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான காரணங்கள், கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள், கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப்பது, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.
எனவே, செல்போன்களைஅதிகம் பார்ப்பவர்களும், கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களும் அவர்களின் கண் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். அவர்கள் எதிலெல்லாம் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்...
போதுமான அளவு தூக்கம்:
கண் ஆரோக்கியத்துக்கு. போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியமானது. தினமும் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். நாம் விழித்திருக்கும்போது கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பதால், அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது.
போதுமான தூக்கம் இல்லாதது, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள். கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம். கண்களில் வறட்சி அல்லது அதிகப்படியான கண்ணீர் வடிதல், மங்கலான பார்வை. ஒளி உணர்திறன் மற்றும் அதிகபட்சமாக கழுத்து மற்றும் தோள்களில் வலி ஆகியவை ஆகும்.
பாதுகாப்பு கண்ணாடிகள்:
நீங்கள் வெயிலில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் புறஊதாக் கதிர் பாதுகாப்பு சன்கிளாஸ்களை பயன்படுத்தலாம். அதேநேரம் நீங்கள் பயன்படுத்தும் சன்கிளாசின் லென்சுகள் 99 முதல் 100 சதவீதம், புற ஊதா ஏ. புற ஊதா பி கதிர்களை தடுக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
கைகளால் கண்களை தேய்க்காதீர்கள்:
கைகளால் கண்களை அழுந்த தேய்க்கக் கூடாது. அதனால், கைகளில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம். மேலும் கண்பார்வை குறைபாட்டுக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால் கைகளால் சேதம் அடையும் வாய்ப்புள்ளது.
வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கை, கால்களை சுத்தம் செய்யவேண்டும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி, துகள் போன்றவை கண்களில் படுவதற்கு முன்னர் கழுவி விட வேண்டும். இதன் மூலம் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.
நீரேற்றம், உணவுமுறை:
உடலில் நீரிழப்பு இருக்கும்போது உடல் வறட்சி ஏற்பட்டு, கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படக்கூடும். குறிப்பாக ஒமேகா 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால், கண்களைப் பாதிக்கும் மாகுலர் சிதைவை தடுக்கலாம்.
கம்ப்யூட்டர் பார்க்கும் சரியான முறை:
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் திரை, உங்கள் கண்களில் இருந்து உங்கள் கையின் நீளம் உள்ள தூரத்தில் வைக்கப்பட வேண்டும். மேலும் கண் மட்டத்தில் இருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் நீங்கள் பணிபுரியும்போது, உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்யவேண்டும். அதேநேரம், அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
பாதிப்பை தடுக்கும் வழிமுறை:
கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்கலாம். இருக்கையைவிட்டு எழுந்து சிறிது தூரம் நடக்கலாம். இவ்வாறு திரையில் இருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தரும்.