சினிமா முதல் அரசியல் வரை...தனி முத்திரை பதித்த விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பகுதியில் ராமானுஜபுரம் என்ற ஊரில் பிறந்தார்.;
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பகுதியில் ராமானுஜபுரம் என்ற ஊரில் பிறந்தார். அவர் சிறுவனாக இருக்கும்போதே அவரது குடும்பம் திருமங்கலத்திற்கு இடம்பெயர்ந்தது.
இயற்பெயர் : விஜயராஜ்
சினிமா பெயர் : விஜயகாந்த்
பிறப்பு : 25-ஆகஸ்ட்-1952
பிறந்த இடம் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
மனைவி : பிரேமலதா
குழந்தைகள் : விஜய் பிரபாகரன் - சண்முக பாண்டியன்
பெற்றோர் : அழகர்சாமி - ஆண்டாள்
புனைப்பெயர் : கேப்டன் - புரட்சி கலைஞர்
கல்வி
விஜயகாந்த் தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பை தேவகோட்டையிலுள்ள தி பிரிட்டோ உயர்நிலை பள்ளியிலும், மதுரையில் உள்ள நாடார் உயர்நிலை பள்ளியிலும் பயின்றார். பத்தாம் வகுப்பு வரை படித்த விஜயகாந்த் அதன்பின் தனது தந்தையின் அரிசி ஆலையின் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தார்.
திரைத்துறை பயணம்
படிக்கும் பருவத்திலேயே இவருக்கு சினிமா மீது ஈர்ப்பு இருந்ததால் சினிமாவில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த இவர் 1979ல் இயக்குநர் காஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து தனது திரைப்பயணத்தை துவக்கினார்.
திருப்பம் தந்த ‛சட்டம் ஒரு இருட்டறை'
அதன்பின் 1980ல் வெளிவந்த 'தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க முற்பட்டார். 1981ல் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‛சட்டம் ஒரு இருட்டறை' என்ற திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தையும் தந்தது.
அடுத்தடுத்து வளர்ச்சி
இதன் பிறகு தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக காண்பிக்க நினைத்து அதற்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பல வெற்றிப்படங்களை தந்தார் விஜயகாந்த். தன்னால் குணசித்திர வேடமேற்று நடித்தும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்த படம் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த 'வைதேகி காத்திருந்தாள்' என்ற திரைப்படமாகும். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இதனைத் தொடர்ந்து 'அம்மன் கோயில் கிழக்காலே' 'தழுவாத கைகள்' 'ஊமை விழிகள்' என்று பேர் சொல்லும்படி இவருடைய படப்பட்டியல் நீண்டது.
கேப்டன்
1991ல் இயக்குநர் ஆர்கே செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'கேப்டன் பிரபாகரன்'. இத்திரைப்படம் விஜயகாந்திற்கு 100வது திரைப்படம் என்ற அந்தஸ்தோடு வந்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்கு பின்னர் தான் இவரை இவருடைய ரசிகர்களும் இவருடைய கட்சித் தொண்டர்களும் அன்போடும் மரியாதையோடும் 'கேப்டன்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.
கடைசி திரைப்படம்
இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில்தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவரது இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'சகாப்தம்' என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இதுதான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக அவருக்கு உடல் நல பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது.
நடிகர் சங்கத் தலைவர்
1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். 2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!' என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார்.
அரசியல் பயணம்
சுமார் 35 வருடங்கள் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய இவர் 2005ம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தையும் துவக்கினார்.
2006ல் நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனேக இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று திமுக மற்றும் அதிமுகவிற்கு அடுத்த தனிப்பெரும் கட்சியாக உருவானது. இவர் சந்தித்த முதல் தேர்தலில் தனது முதல் களமாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட சுமார் 13000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடி எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்க்கட்சி
பின்னர் 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து 49 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று, திமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்தது. அதற்கு பின்பு சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பிரதான எதிர்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.
முதல்வர் வேட்பாளர்
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., வி.சி.க., த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம்வகித்த மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவில் ம.ந.கூட்டணி போட்டியிட்ட 104 தொகுதியிலும் படுதோல்வியடைந்தது. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்திலும் படுதோல்வியடைந்தது.
தீவிர உடல் நிலை பாதிப்பால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயாகாந்த் இன்று (டிசம்பர் 28, 2023) காலமானார்.