மனித வாழ்வு சிறக்க உறவுகளை வளர்ப்போம்...!

வலுவான மற்றும் அன்பான குடும்ப உறவுகளைக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்கிறார்கள்.

Update: 2024-07-10 08:09 GMT

குடும்பம் என்கிற மாளிகையை தாங்கி பிடிக்கும் தூண்களாக இருப்பவை உறவுகள். ஒவ்வொருவரையும் இணைக்கின்ற சங்கிலிப் பிணைப்புகளாக உறவுகள் உள்ளன. சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்தாலும் அணியவியலாது. அதுபோல குடும்ப உறவுச் சங்கிலியில் ஒரு உறவு பிரிந்தாலும் அது மேன்மையாக இருக்காது.

உறவு முறைகள் அன்பின் அடையாளங்கள், பாசத்தின் பிணைப்புகள். எல்லைகளைக் கடந்து எங்கோ இருக்கும் தன் மகனுக்கு உடல் நலமில்லாவிட்டால் தாய்க்கும், தந்தைக்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது.

வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். அவர் தனியாக இருந்தால் அவரது மனதில் உள்ள அச்ச உணர்வு மேலும் அதிகரிக்கும். அதுவே, தன்னைச் சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்திருக்க, விழிகளைத் திறந்து பார்க்கும் அவருக்கு முகமெல்லாம் மலர்ச்சி ஏற்படுகிறது. காரணம் ரத்த உறவுகள் சுற்றி இருக்கையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் பாதுகாப்பு உணர்வு தான்.

இதேபோல் வலுவான மற்றும் அன்பான குடும்ப உறவுகளைக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்கிறார்கள். தாத்தா-பாட்டி, சித்தி- சித்தப்பா, அத்தை-மாமா, அண்ணன்-தம்பி, அக்காள்- தங்கை என்று இவர்களுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அதிகமாகக் கிடைக்கின்றது. அம்மா அடித்தால் பாட்டியிடம் ஓடுகின்றனர். அப்பா அடித்தால் தாத்தாவிடம் தஞ்சமடைகின்றனர். அரவணைக்கச் சுற்றிலும் உறவுகள் இருக்கும் பொழுது குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை உணர்வுகள் தானாகவே துளிர் விடுகின்றன. சுற்றிலும் உறவுகள் கூடி இருக்கும் போது மனவலிமையும் கூடுகிறது. இதுதான் கூட்டுக் குடும்பத்தின் மேன்மை. உறவுகளின் மேன்மை.

இன்றைய சூழலில் பரபரப்பான வாழ்க்கை சுழற்சியில் நாட்கள் நகர்கின்றன. வாரங்கள் விரைகின்றன. பழைய நண்பனின் முகம் பார்க்க முடியவில்லை. ஆனால், நேரமில்லை என்ற ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம்.

வசதிகளும், வாய்ப்புகளும் பெருகப் பெருக தேடல்களும் தேவைகளும் எல்லையற்று நீண்டு கொண்டே போகின்றன. அதனால் சிந்தனைகளும் மாறுபடுகின்றன. வாழ்க்கைக்கான தேவைகள் என்ற நிலைமாறி தேவைகளுக்கான வாழ்க்கை என்ற நிலை உருவாகி வருகிறது.

குடும்ப உறவுகளைப் பற்றியோ, நலன் விரும்பிகளைப் பற்றியோ, நட்புகளைப் பற்றியோ சிந்திப்பதற்கு நேரமில்லை. பிறரைப் பற்றிய சிந்தனையற்ற இந்த ஓட்டம் மனிதனைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றது.

தன் நலத் தேடல்களும் இயந்திர வாழ்க்கையின் வேகமும்,  'மனிதம்' காணாமல் போய் விடும் அபாயத்தை உணர்த்துகின்றன.

ஆம்., ஒரு மரம் தளிர்க்க நல்ல நிலமும் நீரும் தேவைப்படுவது போல மனித வாழ்வு சிறக்க உறவு முறைகளின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.

உறவுகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. நமது வாழ்க்கைப் பயணம் முழுக்க உடனிருக்கக்கூடியவர்கள் நம் உறவுகள். கடினமான நேரங்களில் ஆறுதல் அளிக்கக்கூடியவர்கள். சில உறவுகள் நமது கஷ்டத்தில் உதவியும் செய்யக்கூடியவர்கள். சில உறவுகளில் எதிர்பார்ப்புகள் இருக்கும், அவற்றை நிறைவேற்றினால்தான் உறவு தொடரும் என்று பலரும் கருதுகின்றனர். அது பரஸ்பர நம்பிக்கையை பொருத்தது. தன்னால் உதவி செய்ய முடியாவிட்டாலும், உறவை அன்பினால் நிலைக்கச் செய்வது நம் கையில்தான் உள்ளது. ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் வீட்டில்தான் ஆனந்தம் பெருகுகிறது. அன்பு கொண்ட உள்ளத்தை விட உலகில் உயர்ந்தது வேறென்ன இருக்க முடியும்? அந்த அன்பால் உறவுகளை வளர்ப்போம்..!

Tags:    

மேலும் செய்திகள்