ஆரஞ்சு பழத்தோடு இந்த உணவை எல்லாம் சாப்பிடாதீங்க.. ஏன் தெரியுமா?

சில உணவுப்பொருட்களுடன் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது அஜீரணம், ஒவ்வாமை, அசவுகரியம், நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.;

Update:2024-02-05 15:46 IST

ஆரஞ்சு பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பலரும் அதனை விரும்பி ருசிக்கிறார்கள். அதில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இவை வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தவை. ஆனால் சில உணவுப்பொருட்களுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடுவது அஜீரணம், ஒவ்வாமை, அசவுகரியம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆரஞ்சு பழத்துடன் ஒருபோதும் சேர்த்து உட்கொள்ளக்கூடாத உணவுகள் குறித்து பார்ப்போம். தக்காளி, ஆரஞ்சு ஆகியவற்றில் வைட்டமின் சி மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருந்தாலும் கூட இவை இரண்டுமே அசிடிக் உணவுப்பொருட்களாக கருதப்படுகின்றன. ஒரே சமயத்தில் இரண்டு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொள்வது அசிடிட்டி பிரச்சினையை உண்டாக்கும். செரிமானத்துக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

தயிர்

பாலை போலவே, ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மை தயிருடன் கலந்தால் சிலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை ஆரஞ்சுப்பழத்துடன் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக வயிறு சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு பிரச்சினைகளை அதிகப்படுத்தும்.

காரமான உணவுகள்

ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மையுடன் காரமான உணவுகள் சேர்வது செரிமான கோளாறுக்கு வழிவகுத்துவிடும். வயிற்றுப் புண் போன்ற வலி பாதிப்புகளையும் உண்டாக்கிவிடும்.

கொழுப்பு உணவுகள்

அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளும்போது அதன் அமிலத்தன்மை கொழுப்புடன் வினைபுரிந்து அசவுகரியத்திற்கு வழிவகுக்கும்.

பாலாடைக்கட்டி

பாலாடைக்கட்டியுடன் ஆரஞ்சு பழத்தை ருசிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்கும். அஜீரணத்தை தூண்டும்.

காபி

ஆரஞ்சு பழத்துடன் காபி அல்லது பிளாக் டீ உட்கொள்வது வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தலாம். வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.

பானங்கள்

ஆரஞ்சுப் பழத்துடன் கார்பனேற்றப்பட்ட பானங்களை நுகர்வது வயிறு உப்புசம், அசவுகரியம் உள்பட பல்வேறு பாதிப்புகளை அனுபவிக்க வைத்துவிடும்.

மது

ஆரஞ்சு பழத்துடன் மது பானங்கள் கலப்பது வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற் படுத்தலாம். ஒவ்வாமைக்கும் வழிவகுக்கலாம்.

பால்

சிட்ரஸ் பழங்கள், அவற்றின் பழச்சாறுகளுடன் பால் சார்ந்த பொருட்களைச் சேர்ப்பது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மை பாலில் உள்ள புரதங்களுடன் வினை புரிந்து வயிற்று கோளாறு அல்லது வயிறு உப்புசத்திற்கு வழிவகுத்துவிடும். செரிமானத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Tags:    

மேலும் செய்திகள்