வாங்க மட்டுமல்ல.. கொடுப்பதற்கும் சிறந்த நாள் அட்சய திருதியை
இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை என்று போற்றப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத அல்லது தேயாத என்று பொருள். அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர். பலர் திருமணங்களை இந்த நாளில் முடிவு செய்கின்றனர். அதுவும், திருக்கோவில்களில் வைத்து திருமணத்தை முடிவு செய்வதோ, நிச்சயதார்த்த நிகழ்வையோ நடத்துவதோ மிக சிறப்பானது.
இந்த நாளில் தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களை தரும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் நாம் செய்கின்ற நற்காரியங்களும் நமக்கு பல மடங்கு நன்மை பயக்கும். மேலும் தொடர்ந்து நல்ல செயல்கள் பல செய்யக்கூடிய சூழலை நம் வாழ்வில் ஏற்படுத்தி எல்லா வளங்களையும் இறைவன் நமக்கு அருள்வார். எனவேதான் இந்நன்னாளில் மக்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து மகிழ்கின்றனர். குறிப்பாக அட்சய திருதியை கடும் கோடையில் வருவதால் பலர் தங்களால் முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பானகம் மோர் விநியோகிக்கின்றனர். தண்ணீர் பந்தல் அமைக்கின்றனர்.
இந்து சாஸ்திரங்கள் படி, அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். கஷ்டத்தில் இருக்கும், ஏழை மக்களுக்கு அட்சய திருதியை அன்று முடிந்த தானம் செய்யுங்கள். தானம் செய்வதால், நமக்கு மட்டுமல்ல, நம் வருங்கால சந்ததியினருக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
புதிய தொழில் தொடங்குவதற்கும், வீட்டின் கட்டுமான பணியை ஆரம்பிப்பதற்கும் மிகவும் சிறப்பான நாளாக அட்சய திருதியை நன்னாள் அமைந்துள்ளது. இந்த நன்னாள் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் அதிக அளவிற்கு பொருள் சேரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. எனவே, இந்த குறிப்பிட்ட நாளில் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
அதாவது, இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால், இப்போதைய சூழ்நிலையில் சாமானிய மக்களால் தங்கத்தை நினைத்துப் பார்க்கவே முடியாத நிலை உள்ளது. தங்கம் வாங்க முடியாதவர்கள், வீட்டிற்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கலாம்.
பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சய பாத்திரம் அளித்த தினம், அன்னபூரணி தேவி அவதரித்த தினம், விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங்கிய நாள், பரசுராமர் அவதரித்த தினம் என இந்த நாளின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
குறிப்பாக, அட்சய திருதியை விஷ்ணு மற்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு மிகவும் உகந்த மற்றும் விருப்பமான பண்டிகை நாள் என்பதால் அன்று அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நாளை (மே 10) காலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (மே 11) மதியம் 2:50 மணிக்கு முடிவடையும்.