நேர மேலாண்மை எனும் கலை
எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில் அதை செய்து முடிக்க வேண்டும் என்கிற திட்டமிடுதலே நேர மேலாண்மை.;
விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பார்கள். விடா முயற்சியில் நம்பிக்கை கொண்டவர்கள், தனக்கு பிடித்த பணியாக இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சி செய்வார்கள். இந்த உத்வேகம் ஒருநாள் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
ஓவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும். ஆனால் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் இந்த முயற்சி அடங்கியிருக்கிறது. அதுவும் காலத்தே முயற்சி செய்தால் விரைவில் பலனை பெறலாம். இதற்கு நேர மேலாண்மை எனும் கலை முக்கியமானது.
எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில் அதை செய்து முடிக்க வேண்டும் என்கிற திட்டமிடுதலே நேர மேலாண்மை. செய்கிற பணியிலேயே முழுமையாக தன்னை அர்ப்பணித்திருப்பவர்கள் விரைவில் இலக்கை எட்டுவார்கள். ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கவேண்டிய பணியை, 15 நிமிடங்களில் செய்து விடுவார்கள்.
முனைப்பு என்பதை வேட்டையாடும்போது பல்லியிடம் காணலாம். ஒவ்வொரு அடியையும் கவனமாக முன் வைத்து, சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தாமல், முன்னேறி பூச்சியினை விழுங்க எந்த பள்ளியிலும் பல்லிக்கு பாடம் கற்றுத் தரப்படவில்லை.
எழுத்தில் தீவிரம், முழுமையாய் கவனம், அதன் மையத்தில் ஆர்வம் என்கிற கலவையுடன் செயலை மேற்கொள்பவர்கள், மேன்மை அடைவார்கள்.
சாப்பிடும்போது உணவே உலகம், படிக்கும்போது புத்தகமே வேதம் என எந்த நேரத்தில் எது செய்கிறோமோ அந்தச் செயலில் முழுமையாக ஐக்கியமாகிற மனப்பான்மையே நல்ல நேர மேலாண்மைக்கு இலக்கணம்.
படிக்கிற நேரத்தில் படிப்பு, விளையாடும்போது விளையாட்டு என வகைப்படுத்தி கொள்கிறவன் வாழ்வு, முன்னேற்றத்தை நோக்கி ஓடுகிற வாய்க்காலின் நீர் போன்று வளர்கிறது.
சுற்றுலா போகிற இடத்தில் பாடத்தை பற்றி சிந்திக்கிறவர்கள், இரண்டையும் தவறவிடும் இருண்ட பிரதேசத்தின் பிரஜைகள். சோம்பலில் சுகம் காண்கிறவர்களுக்கு ஓராண்டு கூட ஒரு மாதத்தின் பலனே கிடைத்திருக்கும், சுறுசுறுப்புள்ளவர்களுக்கு ஒரு வாரம், ஒரு மாதத்தின் பலனை தரும்.
செய்ய வேண்டிய பணிகளை குறித்துக்கொண்டு, அந்த பணிகளை திருப்தியுடன் செய்து, நாட்களை திட்டமிடுபவர்களுக்கு அனைத்து நாளும் திருநாளே, அனைத்து நேரமும் நல்லநேரமே.
நொடிகளை வீணடிப்பவர்கள் நொடிந்து போவார்கள். அவற்றை பயன்படுத்துபவர்கள் வெற்றிப்படியில் ஏறுவார்கள்.