எலெக்ட்ரிக் வாகனம் வாங்கப்போறீங்களா..? இதோ உங்களுக்கான தகவல்

புதுமைகளை விரும்பும் இந்தியர்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.;

Update:2024-01-27 16:58 IST

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நமக்கும் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கும் ஆசை வரலாம். ஆனால் அந்த வாகனங்கள் பெட்ரோல்-டீசல் வண்டிகளை விட லாபமா? அதை பெட்ரோல்-டீசல் வாகனங்களை போல பயன்படுத்த முடியுமா?, சார்ஜ் செய்வது சுலபமா? என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுவதுண்டு. இந்த சந்தேகங்களுக்கான விளக்கத்தை பார்ப்போம்.

சுற்றுச்சுழல் பாதுகாப்பு முக்கிய காரணமாக இருந்தாலும், பொருளாதார நெருக்கடியும், எலெக்ட்ரிக்/பேட்டரி வாகனங்களுக்கான தேவையை அதிகப்படுத்தியிருக்கிறது. கச்சா எண்ணெய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும், அதன் கொள்முதலில் இருக்கும் சர்வதேச சிக்கல்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு... என பெட்ரோல்-டீசலுக்கு ஏராளமான கெடுபிடிகள் உருவாகியிருப்பதால், இந்திய அரசாங்கம் பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. அதேசமயம், வெப்பமயமாதலை தவிர்க்கும் பார்முலாவாகவும், எலெக்ட்ரிக் வாகனங்கள் கருதப்படுகின்றன.

உலக அளவில் சீனர்கள் அதிக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துகின்றனர். சீனாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, நார்வே, ஜப்பான், இங்கிலாந்து என நாடுகளின் பட்டியல் நீள்கிறது.

புதுமைகளை விரும்பும் இந்தியர்களும், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களை ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் நிலவும் எரிபொருள் விலையேற்றமும், பேட்டரி வாகனங்கள் மீதான வரவேற்பை அதிகப்படுத்துகிறது. சமீபகாலமாக இந்தியாவில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதால், பேட்டரி வாகன திட்டம் வெகுவிரைவிலேயே வெற்றி பெறும்.

சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகளின்படி எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல்-டீசல் வண்டிகளை விட, அதிகளவில் மைலேஜ் தருகின்றன. அதேசமயம், பெட்ரோல்-டீசல் விலை மற்றும் மின்சார விலை, மைலேஜ் விஷயங்களை ஒப்பிட்டு பார்த்தால், எலெக்ட்ரிக் வண்டிகள் லாபகரமானதாகவே தோன்றுகின்றன.

அமெரிக்க அரசு நடத்திய ஆய்வில் மின்சார கார்களுக்கு மின்சாரம் தயாரிக்கும்போது உருவாகும் கார்பன் டை ஆக்சைடு, கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல்-டீசல் எடுத்துப் பயன்படுத்தும் ஐ.சி. என்ஜின் கார்களைவிடக் குறைவாகவே இருப்பதாகக் கூறியுள்ளது. அதனால் மாசு குறைக்கப்படுகிறது. இதன்மூலம் ஓசோன் படலத்தின் ஆயுள் காலத்தையும், பூமியில் நிலவும் ஒழுங்கற்ற வெப்பநிலையையும் கட்டுப்படுத்த முடியும்.

நடுவழியில் பேட்டரி தீர்ந்து போனால் என்ன செய்வது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். பெட்ரோல் பங்க் போன்று அனைத்து பகுதிகளிலும் சார்ஜிங் பாய்ண்டுகள் அமைப்பதுதான் இதற்கு தீர்வாக இருக்கும். சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏராளமான சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பேட்டரி வாகன பயன்பாட்டிற்கு இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால், இத்தகைய சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு, புனே போன்ற இடங்களில் நிறைய சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், பேட்டரி நடுவழியில் தீர்ந்து போனால், அதையும் சமாளிக்க சீனர்கள் ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுதான், ஸ்டெப்னி பேட்டரி. கார்களில் இருக்கும் ஸ்டெப்னி சக்கரங்களை போல, முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வைத்து கொள்ளும் பழக்கத்தையும் கடைப்பிடிக்கிறார்கள். மேலும் ரோட் அசிஸ்ட் எனப்படும் சாலையோர வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். இத்தகைய வசதிகளை, இந்தியாவின் எல்லா பகுதிகளிலும்  விரைவில் எதிர்பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்